ஏனெனில்- 23: அரை நூற்றாண்டாகத் தொடரும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை!

‘மனோன்மணியம்’ சுந்தரனார், மு.கருணாநிதி, கி.வா.ஜகந்நாதன்
‘மனோன்மணியம்’ சுந்தரனார், மு.கருணாநிதி, கி.வா.ஜகந்நாதன்

தமிழ்த்தாய் வாழ்த்தையொட்டிய விவாதங்கள் மீண்டும் ஒருமுறை எழுந்திருக்கின்றன. இந்த முறை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அளித்த தீர்ப்பையொட்டி அவ்விவாதங்கள் அமைந்துள்ளன. 1970-ல், தமிழ்த்தாய் வாழ்த்தாக ‘மனோன்மணியம்’ சுந்தரனாரின் பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. இன்றும் அது குறித்த சர்ச்சைகள் வெவ்வேறு கோணங்களில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

1970 மார்ச் மாதத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகளை வழங்கும் விழாவில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி, அரசு விழாக்களில் இறைவணக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும் என்றும் சுந்தரனார் இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த’ தமிழ் வாழ்த்தாகத் தேர்வுசெய்துகொள்ளப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார்.

என்றாலும் அந்தப் பாடல், சுந்தரனார் இயற்றிய முழுமையான வடிவில் இடம்பெறவில்லை. ‘உன் சீரிளமைத் திறம் வியந்து’ என்பதற்கு முன்னால் இடம்பெற்றிருந்த ‘ஆரியம் போல் உலக வழக்கொழியா’ என்ற சீர்கள் நீக்கப்பட்டே அந்தப் பாடல் மொழிவாழ்த்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தவர்களில் முக்கியமானவர் தமிழறிஞரும் பக்தி இலக்கியங்களில் விற்பன்னருமான கி.வா.ஜகந்நாதன்.

இவ்வார்த்தைகள் நீக்கப்பட்டதற்கு 2 காரணங்கள் என்று மு.கருணாநிதி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். ஒன்று, மற்றொரு மொழியைக் குறைத்தும் பழித்தும் கூற வேண்டாம் என்பது. மற்றொன்று, அழிந்து, ஒழிந்து என்பது போன்ற சொற்களைக் கேட்டு ஒரு சிலர் முகம் சுளிப்பார்கள் என்பது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில், டி.எம்.சௌந்தரராஜனும், பி.சுசீலாவும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடினார்கள். அந்தப் பாடல் மோகன ராகம், திஸ்ர தாளத்தில் இசையமைக்கப்பட்டது என்ற குறிப்புகளையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் அளித்துள்ளது.

கேரளத்துப் பாலக்காட்டில் பிறந்த விஸ்வநாதன் இசையமைக்க, மதுரையில் சவுராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்த சௌந்தராஜனும், ஆந்திரத்தைச் சேர்ந்த சுசீலாவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள் என்பது தமிழுக்குப் பெருமை. இரண்டாம் தமிழாம் இசைத்தமிழுக்கு இவர்களின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரத்தக்கது.

தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தவர்களில் முக்கியமானவர் தமிழறிஞரும் பக்தி இலக்கியங்களில் விற்பன்னருமான கி.வா.ஜகந்நாதன். மொழி வாழ்த்துப் பாடலை கடவுள் வாழ்த்துப் பாடலாக அறிவித்ததை அவர் கடுமையாக எதிர்த்தார். இறைவணக்கப் பாடலாக அவர் பரிந்துரைத்தது தாயுமானவரின் ‘அங்கிங்கெனாதபடி’ பாடலை.

தமிழ்நாடு அரசின் முடிவை ஆதரித்து அன்று அறிக்கைவிட்ட தமிழறிஞர்கள் கா.அப்பாதுரை, ம.பொ.சிவஞானம், மு.வரதராசன் ஆகியோர். பன்மொழிப் புலவர் என்று போற்றப்படும் கா.அப்பாதுரையார், திமுகவின் தீவிர ஆதரவாளர். மனோன்மணியப் பாடல் ஏற்கெனவே தமிழகப் புலவர் குழுவில் தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது என்றும், வடமொழியைக் காட்டிலும் தமிழுக்கு உயர்வு கூறப்பட்டிருப்பதாலேயே அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

புலவர் குழு விவாதத்தின்போது, தாயுமானவர் பாடல் மட்டுமின்றி திருக்குறளின் முதல் அதிகாரத்தை முழுதுமாகப் பாடலாம் என்றும் விவாதிக்கப்பட்டது. தாயுமானவர் பாடல் இந்து மதத்தைச் சார்ந்தது என்பதால், மற்ற மதத்தினர் அதை எதிர்த்தனர். திருக்குறளின் கடவுள் வாழ்த்திலும் தாள், அடி என்பது போன்ற சொற்கள் உருவ வழிபாட்டைக் குறிப்பதால் அதற்கும் எதிர்ப்பு எழுந்தது என்று அப்பாதுரையாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொழி வாழ்த்து இறைவாழ்த்தாகுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து என்று தனித்தனியாக ஒரு பாடலைப் பின்பற்றினால், உலகத் தமிழர்களின் ஒற்றுமையுணர்வை அது பாதிக்காதா என்ற கேள்வியும் உள்ளது. தமிழ்நாட்டுக்கு அருகிலுள்ள புதுச்சேரியில் ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்ற பாரதிதாசனின் பாடலைத்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடிவருகிறார்கள். மலேசியாவில் உள்ள எழுத்தாளர் சங்கத்தினர், சீனி நைனா முகம்மது எழுதிய ‘காப்பியனை ஈன்றவளே’ என்ற பாடலை, உலகத் தமிழ் வாழ்த்தாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மொழிவாழ்த்து உலகம் முழுவதும் உள்ள எல்லாத் தமிழர்க்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in