விராட் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி-9: கேப்டன் கெத்து!

விராட் கோலி:
இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி-9: கேப்டன் கெத்து!

கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, போர்க்களமாக இருந்தாலும் சரி, ஒரு படைக்கு ஒரு தளபதிதான் இருக்க வேண்டும். 2 தளபதிகள் இருந்தால் குழப்பம்தான் ஏற்படும். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகக் கோலியும், பயிற்சியாளராகக் கும்ப்ளேவும் இருந்தபோது இதுதான் நடந்தது. அணியின் வெற்றிக்கு இருவரும் தனித்தனி திட்டங்களை வகுத்தனர். அந்தத் திட்டங்களின்படி அணியை வழிநடத்த விரும்பினர். ஒருவரின் திட்டம் மற்றவருக்குப் பிடிக்காமல்போன கட்டத்தில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அணிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டன. இத்தகைய சூழலில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கும்ப்ளே விலக அப்பொறுப்பில் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார்.

சுதந்திரம் தந்த உத்வேகம்

கும்ப்ளேவுடன் ஒப்பிடும்போது கிரிக்கெட் விளையாட்டில் ரவி சாஸ்திரி பெரிய சாதனையாளர் இல்லை. அதனாலேயே அவருக்கு ஈகோவும் இல்லை. தான் சொன்னபடிதான் அணியை வழிநடத்த வேண்டும் என்று எந்தக் கட்டத்திலும் விராட் கோலிக்கு அவர் அழுத்தம் கொடுக்கவில்லை. அவரை இஷ்டப்படி செயல்பட விட்டார். ஏதாவது ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப் போனால் மட்டும் கோலிக்கு உதவினார்.

இந்தச் சுதந்திரம் விராட் கோலிக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுத்தது. தனக்கு ஏற்ற வகையில் அணியை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார். முதலாவதாக வீரர்கள் அனைவரும் உடலை ‘ஃபிட்’டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தோனியின் காலத்திலேயே இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுதான் என்றாலும், கோலி அதை மேலும் கடுமையாக அமல்படுத்தினார். ‘யோயோ டெஸ்ட்’டில் வெற்றி பெறாத வீரர்கள் யாரும், அணியில் இடம்பிடிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தினார்.

வில்லாக வளைக்கவைத்த சோதனை

“அது என்ன யோயோ டெஸ்ட்?” என்ற கேள்வி பலருக்கும் எழலாம். பிரதமர் நரேந்திர மோடிக்குக்கூட இந்தக் கேள்வி எழுந்துள்ளது. ஒருமுறை தன்னைச் சந்தித்த விராட் கோலியிடம் இதுபற்றி கேள்வி எழுப்பியுள்ளார் மோடி. அப்போது அவரிடம் இதுபற்றி விளக்கமாக பதில் அளித்துள்ளார் கோலி.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரான ஜென்ஸ் பாங்க்ஸ்போ என்பவர்தான் இந்த ‘யோயோ டெஸ்ட்’ சோதனை முறையை உருவாக்கினார். இதன்படி 20 மீட்டர்கள் இடைவெளியில் 2 கூம்புகள் வைக்கப்பட்டிருக்கும். பயிற்சியாளர் விசில் அடித்ததும், வீரர்கள் 2 கூம்புகளுக்கும் இடையே மாறி மாறி ஓடவேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் தூரத்தை ஓடிக் கடக்காவிட்டால் அவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள். இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள் 8 நிமிடம் 15 விநாடிகளுக்குள் இந்த 2 கூம்புகளுக்கும் இடையே 2 கிலோமீட்டர்கள் தூரம் ஓடவேண்டும். மற்ற வீரர்கள் இதே தூரத்தை 8.30 நிமிடங்களில் கடக்க வேண்டும்.

துடிப்பான படை

இந்த யோயோ டெஸ்ட்டில் வெற்றிபெற வேண்டுமானால், வீரர்கள் தங்கள் உடல்நிலையை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைக்காமல்போன ரெய்னா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், பேட்ஸ்மேன் நிதீஷ் ராணா, சுழற்பந்து வீச்சாளர் ராகுல் திவாட்டியா, ஜெய்தேவ் உனட்கட், சித்தார்த் கவுல் ஆகியோர் ஒருமுறை இத்தேர்வில் தோற்று, மீண்டும் உடலை ஃபிட்டாக்கி இதில் தேர்ச்சிபெற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். இதனால் துடிப்பான, இளமையான படையாக கோலியின் கிரிக்கெட் படை உருவானது.

அதேநேரத்தில் கங்குலியையும், கோலியையும் போல இளம் வீரர்களை ஊக்குவிக்கும் பணிகளிலும் விராட் கோலி ஈடுபட்டார். கே.எல்.ராகுல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ரிஷப் பந்த் என்று கோலியால் சர்வதேச கிரிக்கெட்டில் பட்டை தீட்டப்பட்டவர்கள் ஏராளம். இதில் ஒரு கட்டத்தில் கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் சொதப்ப, அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்தன. ஆனால் இந்தச் சோதனையான காலகட்டத்திலும், கே.எல்.ராகுலுக்கு விராட் கோலி பக்கபலமாக இருந்தார்.

கோலி எதிர் ரோஹித்

இந்தக் காலகட்டத்தில் கோலிக்கு நிகராக ரோஹித் சர்மாவின் வளர்ச்சி இருந்தது. இந்திய கிரிக்கெட்டில் கோலிக்கு முன்பே இந்தியாவுக்காகக் களம் இறங்கியவர் ரோஹித் சர்மா. விராட் கோலிக்கு முன்னதாக, அடுத்த சச்சின் என்று இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டதும் அவருக்குத்தான். ஆனால் தொடக்க காலகட்டத்தில் அடுத்தடுத்து சில போட்டிகளில் சொதப்பியதால், அந்த இளவரசுப் பட்டம் விராட் கோலியிடம் சென்றது. 2013-ல் தொடக்க ஆட்டக்காரராக மாறிய பிறகு, ரோஹித்தும் வேகமாக முன்னேற, கோலிக்கு இணையாக அவருக்கும் ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.

ஐபிஎல்லில் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்ற பிறகு, 4 முறை அந்த அணிக்குக் கோப்பையைப் பெற்றுத் தந்தார்.

அதேபோல் ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டைச் சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையும் படைத்தார். கேப்டனாக இந்தியாவுக்கு ஆசிய கோப்பையையும் வென்று கொடுத்தார். இதனால் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் அஜித் போல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோலி - ரோஹித் சர்மா என்று பிரிந்தனர். இதனால் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றம் உருவானது.

இதை வலுப்படுத்தும் விதமாக கடந்த 2020-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கு, முதலில் ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்படவில்லை. காயம் காரணமாக அவரைத் தேர்வு செய்யவில்லை என்று தேர்வாளர்கள் கூறிய நிலையில், ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா ஆடியது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி கோலியிடம் செய்தியாளர்கள் கேட்க, ரோஹித் சர்மாவின் காயம் எந்த அளவுக்கு உள்ளது என்று தனக்குத் தெரியாது என்றார். தனது அணியில் ஆடும் வீரருக்கு என்ன நடந்தது என்றுகூட கேப்டனுக்குத் தெரியாதா என்ற விமர்சனம் எழுந்தது.

அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் வீரர்களை வைத்து ரோஹித் சர்மா அணிக்குள் அரசியல் செய்வதாக அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இருவருக்கும் இடையே நட்புப் பாலம் அமைக்கும் முயற்சியில் ரவி சாஸ்த்ரி ஈடுபட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்து தொடருக்கு முன்பிருந்த ‘பயோ பபிள்’ காலத்தில் இருவரையும் அழைத்து சாஸ்திரி சமாதானம் செய்தார். அதன் பிறகு இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததாக ஒரு தோற்றம் எழுந்தது. அல்லது நெருக்கமாக இருப்பதைப்போல் இருவரும் ரசிகர்களிடம் காட்டிக்கொண்டனர்.

சேனாவை வென்ற சேனை

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை உலகக் கோப்பையை 2 முறை வென்றாலும், சேனா (SENA) என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய அணி அதிக வெற்றிகளைப் பெற்றதில்லை. ஆனால், தான் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அதை மாற்றி எழுதிய கோலி, பல வெற்றிகளைப் பெற்றார். ஆசிய கேப்டன்களிலேயே சேனா நாடுகளில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.

ஒரு கேப்டனாக இத்தனை பெருமைகளைப் பெற்றாலும், ஒரு சுமை கோலியின் மனதை அழுத்திக்கொண்டே இருந்தது. 2 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதத்தைக்கூட அடிக்க முடியவில்லை என்பதே அந்தச் சுமை. அதை எப்படி சரிசெய்வது என்று கோலி யோசிக்கத் தொடங்கினார்.

(சனிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.