செயற்கை முறை கருத்தரித்தல் என்றாலே சிசேரியன் தானா?

அவள் நம்பிக்கைகள்-44
செயற்கை முறை கருத்தரித்தல் என்றாலே சிசேரியன் தானா?

"டெஸ்ட் ட்யூப் பேபி என்றாலே சிசேரியன் தான் செய்வார்களாமே.., உண்மையா டாக்டர்..?" 

- செயற்கை முறையில் கருத்தரித்திருந்த தன் மனைவியுடன் செக்கப்பிற்கு வந்திருந்த கணவர் ஒருவர், தன் மனைவியின் மீதான அக்கறையில் இப்படிக் கேட்டார்.

“அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லையே.  சுகப்பிரசவமும் ஆகுமே" என்றேன் நான்.

“ஆனால் நேற்று நான் இன்டர்நெட்டில் பார்த்தபோது புள்ளிவிவரங்கள் அப்படிச் சொல்லவில்லையே டாக்டர்..?" என்று அடுத்த கேள்வியை அவர் கேட்டார்.

“நீங்கள் சொல்வதும் உண்மைதான்‌... நான் சொல்வதும் உண்மைதான்‌. உங்கள் மனைவிக்கு சுகப்பிரசவமாகத்தான் இருக்கும் பாருங்கள்” என்று புன்னகைத்தபடி சொல்லத் தொடங்கினேன்.

குழந்தைப்பேறின்மை பிரச்சினைக்குத் தீர்வாக நாம் 'ஐ.வி.எஃப்' மற்றும் 'ஐ.யூ.ஐ' என்ற இரண்டு முறைகளில் செயற்கைக் கருவூட்டலை மேற்கொள்கிறோம்.

பொதுவாக விந்தணுக்கள் குறைவு, கருக்குழாய் அடைப்பு, சினைமுட்டை குறை, கருப்பை மற்றும் சினைப்பை பாதிப்புகள் போன்ற பல காரணங்களால் இயற்கையாகக் கருத்தரிக்க இயலாதபோது அவர்களது கருமுட்டை மற்றும் விந்தணுக்களைத் தனியே எடுத்து, அதற்கான பிரத்யேக ஆய்வகத்தில், சோதனைக் குழாய் மூலம் வெளியே கருவை உருவாக்கி, அது சிறிது வளர்ந்ததும் பெண்ணின் கருப்பைக்குள் தனியாகச் செலுத்தும் முறையை ஐ.வி.எஃப் (In Vitro Fertilization) எனும் டெஸ்ட் ட்யூப் பேபி என்கிறோம். மாறாக, ஆணின் விந்தணுக்களைச் தனியாக சேகரித்து, ஆய்வகத்தில் 'swim up' முறையில் சுத்திகரிப்பு செய்து, அதிகத் துடிப்பு மற்றும் அதிக வேகமுள்ள அணுக்களை மட்டும், அண்டவிடுப்பு நிகழும் சரியான தருணத்தில் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தும் முறையை ஐ.யூ.ஐ (Intra Uterine Insemination) என்கிறோம். 

இதில் கருவுறுதல் ஐ.வி.எஃப் முறையில் 40 சதவீதம் வெற்றியடைகிறது என்றால் ஐ.யூ.ஐ வெறும் 15 சதவீதம் மட்டுமே வெற்றியடைகிறது. கூடவே, பொதுவாக ஒன்று தவறினாலும் மற்றொன்றாவது வெற்றியடையட்டுமே என, பெரும்பாலான ஐ.வி.எஃப். கருத்தரிப்பு முறையில் இரண்டு அல்லது மூன்று கரு செலுத்தப்படுவதால், இரட்டைக் குழந்தைகள் பிரசவிப்பது ஐவிஎஃப்பில் இயல்பாக நிகழ்கிறது.

பொதுவாகவே இந்த டெஸ்ட் ட்யூப் குழந்தை முறைகள் எல்லாம் இயற்கையாகக் கருத்தரிக்கக் காத்திருந்து, முயற்சிகள் பலனளிக்காதபோது தான் மேற்கொள்ளப்படுகிறது என்பதால், பெரும்பாலான பெண்கள் செயற்கை முறைகளுக்கு முயற்சிக்கும்போது தங்களது 35-40 வயதை நெருங்கிவிடுகின்றனர். அப்படி இந்த வயதில் தாய்மையடையும்போது முதிர்ந்த வயது காரணமாகவும், கருத்தரிக்கும்போதே அவர்களுக்கு இருக்கும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன் போன்ற வாழ்க்கைமுறை நோய்கள் காரணமாகவும், கருத்தரிக்க விடாமல் இருந்த கருப்பைக் கட்டி அல்லது வீக்கம் போன்றவை காரணமாகவும், கர்ப்பகால சிக்கல்கள் இன்னும் சற்று கூடுதலாகிவிடுகிறது. 

இவற்றின் காரணமாக இவர்களுக்குக் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் 50 சதவீதம் வரையிலும், மன நலிவு, கருப்பைவாய் திறமின்மை போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் 20 சதவீதம் வரையிலும் இருப்பதுடன், பிற பிறவிக்குறைபாடுகள், பனிக்குட நீர் உடைதல் குறைமாதப்பேறு, குறைந்த எடைக்குழந்தை, புட்டப்பேறு போன்ற பல பிரச்சினைகளுடன், கருவிலேயே குழந்தை இறந்து, தாய்-சேய் இருவரையுமே பாதிக்கும் வாய்ப்புகள் சாதாரண கர்ப்பத்தைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக இருப்பதால்தான் கருத்தரித்த நாள் முதல் இப்பெண்களுக்கு அதிக கவனமும், அதிக மருத்துவ உதவியும் தேவைப்படுகிறது. மேற்கூறப்பட்ட பலவற்றில், கர்ப்பகாலத்தில் மருத்துவமனை உள்அனுமதி, தொடர் கண்காணிப்பு மற்றும் தொடர் சிகிச்சைகள் தேவைப்படுகிறது என்பதுடன், முன்னரே பிரசவிக்கும் குழந்தைகளுக்கு, பச்சிளம் குழந்தைக்கான சிறப்பு சிகிச்சைகளும் நிச்சயம் தேவைப்படுகிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இந்த செயற்கை கருத்தரிப்பு முறையை ‘High Risk Pregnancy' என அழைக்கும் சர்வதேச மகப்பேறு மருத்துவ அமைப்பு, இவர்களுக்கு பெரும்பாலும் Elective Caesarean எனப்படும் திட்டமிடப்பட்ட சிசேரியன் பிரசவ முறையையே பரிந்துரைக்கிறது. உண்மையில் உலகெங்கும் 55-70 சதவீதம் வரையிலான இப்பெண்களுக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை முறைதான் மேற்கொள்ளப்படுகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

ஆனால், இப்படி வயது தாண்டி செயற்கை முறை கருத்தரிப்புக்கு முடிவு செய்யாமல் சற்று முன்னரே முயற்சிப்பவர்களுக்கும், வயது தாண்டியும் தமது ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கும் மற்ற எந்தவொரு பெண்ணைப் போலவே சுகப்பிரசவம் மட்டுமே நடக்கிறது.

“இவ்வளவு ஏன், நமது பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது 35 வயதில் டெஸ்ட் ட்யூப் முறையில் கருத்தரித்து, வேறு பாதிப்புகள் எதுவுமின்றி சுகப்பிரசவம் ஆனவர்தான் என்பது தெரியுமா உங்களுக்கு?

அதனால்தான் சொல்கிறேன்... வயது தாண்டினாலும் ஆரோக்கியமாக இருக்கும் உங்கள் மனைவிக்கு சுகப்பிரசவம்தான் ஆகும்” என்று நான் சொன்னதும் நிம்மதியானார் அந்தக் கணவர்.

உண்மையில் இணையத்தில் காணப்படும் புள்ளிவிவரங்களும் சரியானதுதான். ஆனால் அதற்கான காரணங்கள் குறித்தும் தேடிப்பார்த்தால்தான் பல விஷயங்கள் புலப்படும். சரி, டெஸ்ட் ட்யூப் பேபி என்றாலே சிசேரியன் தானா எனும் கேள்வி பலரிடம் இருக்கிறது. அதற்குத் தாயின் வயதும் ஆரோக்கியமும்தான் காரணமே தவிர, தாய்க்கும் சேய்க்கும் பாதிப்புகள் எதுவும் இல்லாதபோது சுகப்பிரசவத்துக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதே நிதர்சனம். இந்த சுகமான தகவலுடன்  'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது..!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in