
துணிக்கடைக்கு வந்து துணி வாங்குவது போல் நடித்து, சுடிதார் கட்டுக்களை தங்கள் புடவைக்குள் மறைத்து எடுத்துச் செல்ல முயன்ற இரண்டு பெண்கள் கடை ஊழியர்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
புதுவை மாநிலம் காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள பிரபல துணிக்கடைக்கு இன்று காலை 2 பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் நீண்ட நேரமாகியும் துணி எதையும் எடுக்கவில்லை. மாறாக ஒவ்வொரு பிரிவாக சென்று வந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் நீண்ட நேரம் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். துணிகள் எடுப்பது போல ஊழியர்களிடம் பேசியபடி நீண்ட நேரமாக கடையிலேயே சுற்றி வந்தனர்.
இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் அந்த பெண்கள் அறியாதவாறு அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். அப்போது சுடிதார் பிரிவில் இருந்த அந்தப் பெண்கள் சுடிதார் பண்டல்களை எடுத்து தங்கள் புடவைக்குள் மறைத்து வைத்தனர். இதனைக் கண்காணிப்பு கேமரா மூலம் உறுதி செய்து கொண்ட கடை ஊழியர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து அமர வைத்துவைத்து விட்டு காரைக்கால் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த காரைக்கால் நகர காவல் நிலையத்தினர் அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த மலர்(40), உஷா (50) என்பதும், இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
அதனையடுத்து அவர்கள் திருட வந்தவர்கள் என்பதை உறுதி செய்து கொண்ட போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.