வறுமையில் குடும்பம்... குவைத்திற்கு சென்ற பெண் சித்ரவதை: 5 நாளில் மீட்டது காவல் துறை

வறுமையில் குடும்பம்... குவைத்திற்கு சென்ற பெண் சித்ரவதை: 5 நாளில் மீட்டது காவல் துறை

வீட்டு வேலைக்கு சென்று குவைத்தில் சிக்கி தவித்த சென்னை பெண், காவல் துறையினரின் துரித நடவடிக்கையால் 5 நாளில் மீட்டுள்ளனர். "வெளிநாட்டில் வேலைக்காக செல்லுவோர் பணி விசா பெற்று செல்ல வேண்டும். சுற்றுலா விசாவை பயன்படுத்தி செல்ல வேண்டாம்" என தாம்பரம் காவல் துறை ஆணையர் ரவி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், லட்சுமண் நகரை சேர்ந்தவர் வனஜா(58). இவரது மகள் மஞ்சுளா(38), இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 16 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்றதால் மஞ்சுளா இதுநாள் வரை தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முடிவெடுத்த மஞ்சுளா திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்த பாஷா என்ற டிராவல் ஏஜென்சி மூலம் குவைத் நாட்டிற்கு வேலைக்காக 60000 ரூபாய் பணம் கொடுத்துள்ளர். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி குவைத் சென்றுள்ளார் மஞ்சுளா.

இந்த நாட்டிற்கு சென்ற பின்னர், தான் விற்கப்பட்டுள்ளதாக மஞ்சுளாவுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில், வாட்ஸ்அப் மூலம் வீடியோ பதிவு செய்து தனது அம்மாவிற்கு அனுப்பியுள்ளார் மஞ்சுளா. அதில், தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், தன்னை அறையில் வைத்து பூட்டி, உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்வதாகவும் கூறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ந்து போன தாய் வனஜா, இது குறித்து தாம்பரம் ஆணையர் அலுவலகத்தில் தனது மகளை மீட்டு தருமாறு புகார் அளித்தார்.

அதன் பேரில் பல்லாவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலையை சேர்ந்த ஏஜெண்ட் பாஷா (31), சர்தார் (50) ஆகியோரை கடந்த 28-ம் தேதி பிடித்து வந்து விசாரணை செய்து, குவைத்தில் சிக்கியுள்ள மஞ்சுளாவை மீட்டு தமிழகம் வர போலீஸார் ஏற்பாடு செய்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த தாம்பரம் காவல் துறை ஆணையர் ரவி, "வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற மோகத்தில் நிறைய பெண்கள் வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். விசாரிக்காமல் யாரும் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டாம். கண்ணீர் மல்க தாய் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாம்பரம் ஆணையரக போலீஸார் மகளை உடனடியாக மீட்டு கொண்டு வந்தனர்.

இது போன்ற பிரச்சினைகளுக்கு protector of emigrations அவர்களுக்கு கடிதம் எழுத உள்ளேன். தனியாக ஒரு பெண்ணை அனுப்பும் போது சரியான முறையில் விசாரித்து தான் அனுப்ப வேண்டும். அரசுக்கு விவரங்களை அனுப்பி சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்புவதன் மூலம் ஒரு நிரந்தர தீர்வை காண முடியும்" என்று கூறினார்.

பின்னர் மீட்கப்பட்ட பெண் கூறுகையில், "தன்னை கொத்தடிமை போல் நடத்தினர். உணவு வழங்காமல், அடிக்க முயன்றனர். இதனால் தனது அம்மாவை தொடர்பு கொண்டு கூறியதால், அவர் மூலம் போலீஸாரின் உதவியோடு 5 நாட்களில் தாயகம் திரும்பியுள்ளேன். இல்லையென்றால் பிள்ளை குட்டிகளைகூட பார்த்து இருக்க முடியாது" என கண்ணீர் மல்க கூறினார்.

குவைத்தில் சிக்கித் தவித்த தமிழக பெண்ணை தகவல் கிடைத்த 5 நாட்களில் மீட்டு தமிழகம் கொண்டு வந்த பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு போலீஸார் டொமினிக் ராஜ், உதவி ஆணையர் ஆரோக்கிய ரவிந்திரன், ஆய்வாளர் தயாள் ஆகியோரை தாம்பரம் காவல் துறை ஆணையர் ரவி பாராட்டினார்.

Related Stories

No stories found.