சட்டவிரோதமாக மருந்தகத்தில் வைத்தே கருகலைப்பு: பறிபோன பெண்ணின் உயிர்

அனிதா
அனிதா

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ராமநத்தம் கிராமத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பால் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன்-அனிதா தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது அனிதா மூன்றாவது முறையாக கருவுற்றுள்ளார். மூன்றாவதாக பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிய கடந்த சில நாட்களுக்கு முன்பு இராமநத்தம் வந்து ஸ்கேன் செய்து பார்த்ததில் கருவில் உள்ளது பெண் குழந்தை என தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த 5.5.22 அன்று இராமநத்தத்தில் உள்ள முருகன் என்பவரது மருந்தகத்துக்கு கருக்கலைப்பு செய்ய சென்றிருக்கிறார்கள். அவர் தனது மருந்தகத்தில் வைத்தே அனிதாவிற்கு கருக்கலைப்பு செய்துள்ளார். கருக்கலைப்புக்குப் பின் அனிதா மயக்கத்திலேயே இருந்துள்ளார்.

ரத்தப் போக்கும் நிற்காமல் தொடர்ந்திருக்கிறது. அனிதா ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்ட வேல்முருகன் இதுகுறித்து முருகனிடம் கேட்டுள்ளார். அதனையடுத்து உடனடியாக முருகன் தனது காரில் அனிதா ஏற்றிக் கொண்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அனிதாவின் நிலையைக் கண்ட அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். தவறான கருக்கலைப்பு மேற்கொண்ட முருகன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அனிதா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (7.5.22) உயிரிழந்தார். மருந்தகம் நடத்தி வந்த முருகன் மருத்துவத்துறைக்கு சம்பந்தமில்லாத பட்டப்படிப்பு படித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான சான்றிதழ்களும் கூட மருந்தகத்தில் இல்லை. இதைத்தொடர்ந்து பெண் சாவுக்கு காரணமான முருகனை தேடி வருகின்றனர்.

இது குறித்த சம்பவத்தை கேள்விப்பட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு இன்று இராமநத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in