எல்லைப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் உயர்த்தப்படுமா?

தியாகி முத்துகருப்பன்
தியாகி முத்துகருப்பன்

எல்லைப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என, தியாகிகள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகளுக்கு இணையாக, எல்லைப் போராட்ட தியாகிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் கேரளத்தோடு இருந்தது. குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைக்கக் கோரி மார்ஷல் நேசமணி தலைமையில் எழுச்சியான போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டத்தில் தடியடி, துப்பாக்கிச்சூடு ஆகிய சம்பவங்களும் நிகழ்ந்தன. இன்னுயிர் துறந்து, சிறைபட்டு பலரது போராட்டங்களின் விளைவாக 1956-ம் ஆண்டு, நவ.1-ம் தேதி குமரி மாவட்டம், தமிழகத்தோடு இணைந்தது.

இந்தத் திருத்தமிழ் போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகி முத்துகருப்பன் கூறும்போது, “மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அண்மையில் எல்லைப் போராட்டத்தில் பங்குபெற்று, இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் 110 தியாகிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழங்கியது. அதேபோல் இதுவரை 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக பெற்றுவந்தோம். அதையும் இந்த அரசு 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதேபோல் இதற்கு முன்பு தியாகிகளுக்கு மட்டுமே பேருந்தில் இலவச பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. நடப்பு ஆண்டில் இருந்து, உடன் வரும் ஒருவருக்கும் பேருந்தில் இலவசம் என அறிவித்து எங்கள் பயணத் துணைக்கும் வழிசெய்துள்ளது.

நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபம்
நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபம்

ஆனால், ஓய்வூதியமாக 6,000 ரூபாய் தருவது இப்போதைய சூழலுக்கு ஏற்றுக்கொள்ளும் தொகை இல்லை. 1970-ம் ஆண்டில் 700 ரூபாயாக ஓய்வூதியத் திட்டம் தொடங்கியது. அப்போதிருந்த விலைவாசியோடு ஒப்பிட்டால் சாதாரண தேநீர் கூட இருபது மடங்கு விலை கூடிவிட்டது. ஆனால், பென்சன் தொகை உரிய அளவுக்கு உயரவில்லை. அதேபோல் நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு 6 ஆயிரம் ரூபாயே வழங்கப்படுகிறது. நாட்டு விடுதலை, எல்லைப் போராட்டங்கள் இரண்டையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

அதேபோல் இந்த 6,000 ரூபாய் ஓய்வூதியத்திலேயே 500 ரூபாய் மருத்துவப்படியும் அடங்குகிறது. அதேநேரத்தில் எல்லைப் போராட்டங்களில் பங்கெடுத்த அனைவருமே, இப்போது 80 வயதைத் தாண்டிவிட்டார்கள். அவர்களுக்கு மருத்துவத்துக்கும், மாத்திரை செலவுகளுக்குமே ஒவ்வொரு மாதமும் பெரிய தொகை செலவாகி விடுகிறது. இப்படியான சூழலில் நாட்டு விடுதலைக்கு பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, எல்லைப் போராட்ட தியாகிகளுக்கும் பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கவேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in