`பியான்' புயலில் மாயமான மீனவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்குமா?

`பியான்' புயலில் மாயமான மீனவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்குமா?
தமிழக மீனவர்கள்

கடந்த 2009-ம் ஆண்டு ஏற்பட்ட பியான் புயலால் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு, அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்து 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. அதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுகின்றன.

ஜஸ்டின் ஆண்டனி
ஜஸ்டின் ஆண்டனி

இதுகுறித்து சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் ஜஸ்டின் ஆண்டனி காமதேனு இணையதளத்திடம் கூறுகையில், ``குமரி மாவட்ட மீனவர்கள், அதிலும் குறிப்பாக தூத்தூர் மண்டல மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் உலக அளவில் பெயர் பெற்றவர்கள். இவர்கள் பாரம்பரிய மற்றும் நவீன மீன்பிடி முறைகளில் தனித்திறமை பெற்றுள்ளனர். இந்திய தேசத்திற்கு பெருவாரியான அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்றனர். இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் மரணம் அடைவது, மாயமாவது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் இம்மீனவர்களின் குடும்பங்கள் அனாதைகளாக்கப்பட்டு, வாழவழியின்றி நடுத்தெருவில் நிற்கும் பரிதாபமான சூழ்நிலை ஏற்படுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி நள்ளிரவு அரபிக்கடலில் உருவான பியான் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல்தாக்கிய அன்று இரவு அரபிக்கடலில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்துகொண்டிருந்த மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்தூர் மண்டலத்தை சார்ந்த 8 மீனவர்கள் ஆழ்கடலில் மூழ்கினர். இவர்களது விசைப்படகும் ஆழ்கடலில் மூழ்கியது. அதிவேக படகுகள், ஹெலிகாப்டர் போன்றவை மூலம் அப்போது தேடியும் இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை.

இந்நிலையில் பியான் புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அப்போது அரசு தரப்பில் கூறப்பட்டது. இவர்களுக்கு அப்போது நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இருப்பினும், சம்பவம் நடந்து 13 வருடங்களாகியும் மாயமான மீனவர்களின் உறவினர்களுக்கு இதுவரை நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த மீனவ மக்களின் மீது கருணை கொண்டு, இவ்விசயத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து, எவ்வித உதவியும் இன்றி நடுத்தெருவிலே தவிக்கும் இம்மீனவர்களின் உறவினர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்கிட உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in