பிளாட்டினத்தை குறிவைத்து விளைநிலங்களைக் கையகப்படுத்த திட்டமா?

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள்!
ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டவர்கள்
ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டவர்கள்படம்: கேயெஸ்வி

கோவை, அன்னூர் தாலுகாவைச் சேர்ந்த சில கிராமங்களில் சுமார் 3,800 ஏக்கர் நிலங்கள் அங்கு உருவாகும் தொழிற்பேட்டைக்காக அரசு கையகப்படுத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவது, அப்பகுதி விவசாயிகளையும் பொதுமக்களையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

தங்கள் நிலத்தை அரசு எடுக்கக்கூடாது என்ற கோரிக்கை மனுக்களுடன் நேற்று கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், “இந்தக் குறிப்பிட்ட நிலத்தினடியில் பிளாட்டின படிமங்கள் உள்ளன. அதனால் இந்த நிலங்களை தற்போது அரசு கையகப்படுத்தி, பிற்காலத்தில் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க நினைக்கிறது” என்ற சந்தேகத்தையும் கிளப்பினார்கள்.

இதுகுறித்து அந்த மக்களை ஒருங்கிணைத்த கொங்கு பேரவை நிறுவனத் தலைவர் குமார.ரவிக்குமார் நம்மிடம் பேசினார்.

‘‘அன்னுார் தாலுகாவில் குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, பொகலுார், வடக்கலுார், மேட்டுப்பாளையம் தாலுகாவில் பள்ளேபாளையம், இலுப்பநத்தம் என 6 ஊராட்சிகளில் சுமார் 3,800 ஏக்கரை தொழிற்பேட்டை அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலங்கள், இங்கே வசிக்கும் சுமார் 800 குடும்பங்களுடைய பரம்பரையான விவசாய நிலங்களாகும். கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் அத்திக்கடவு அவிநாசி திட்ட பாசனப்பகுதிக்குள் இந்த நிலங்களும் வருகிறது.

இந்த நிலங்களை அரசு தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்தப் போவதாக, 2 மாதங்களுக்கு முன்பிருந்தே செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதற்கான பணிகளை மேட்டுப்பாளையம், அன்னூர் வட்டங்களைச் சார்ந்த நில எடுப்பு அதிகாரிகள் கணக்கெடுத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

கோரிக்கை மனு
கோரிக்கை மனு

இது இப்பகுதி மக்கள் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, மேற்குவங்கம் சிங்கூர் மாவட்டத்தில் நானோ கார் தொழிற்சாலை பிரச்சினையில், விவசாயியின் இசைவு இல்லாமல் நிலத்தை எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்துள்ளது. தொழிற்சாலை என்பது வளர்ச்சிப் பணியில் சேராது என்றும் சொல்லியுள்ளது. ஆகவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, மக்களுடைய உணர்வுக்குப் புறம்பாக இந்த தொழிற்பூங்கா அமைக்கும் அரசின் உத்தேசத் திட்டத்தை கைவிடவேண்டும். மாவட்ட ஆட்சியர் எங்கள் கருத்துகளை கேட்டு இந்தப் பகுதியில் நிலம் எடுக்கப்படாது என்று அறிவிக்க வேண்டும். எதிர்ப்பை மீறி நிலத்தை எடுத்தால் உயிரைக் கொடுத்தாவது நிலத்தை காப்போம்’’ என்றார் ரவிக்குமார்.

குமார.ரவிக்குமார்
குமார.ரவிக்குமார்

பிளாட்டினம் விவகாரம் குறித்து பேசிய அவர், “இந்த நிலத்திற்கு கீழே, மேட்டுப்பாளையத்திலிருந்து திருச்செங்கோடு வரைக்கும் சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்திற்கடியில் தங்கத்தை விட மதிப்புமிக்க பிளாட்டினம் இருப்பதாகச் சொல்கிறார்கள். பிளாட்டினத்திற்காக நிலத்தை எடுப்பதாகச் சொன்னால் பிரச்சினை வரும் என்பதால் தொழிற்பேட்டை என்ற பெயரில் நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கலாம் என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இப்போதைக்கு அரசு அந்த நிலங்களைக் கையகப்படுத்திவிட்டு பின்னாளில் இதை பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கும் திட்டமும் இதற்குள் இருக்குமோ என நாங்கள் சந்தேகிக்கிறோம். ஆனால், எதுவாக இருந்தாலும் எங்களது நிலங்களை நாங்கள் எக்காரணம் கொண்டும் கையகப்படுத்த விடமாட்டோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in