கேரளத்தால் சூறையாடப்படும் கனிம வளம்: கடிவாளம் போடுமா தமிழக அரசு?

எம் சாண்ட் குவாரி
எம் சாண்ட் குவாரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குமரியில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் இயற்கை வளங்கள் கேரளம் நோக்கி சென்று கொண்டிருப்பது சூழல் ஆர்வலர்களைக் கொதிப்படைய வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் 3 குவாரிகள் இயங்கிவருவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் துரைமுருகன் தெரிவித்திருந்தார். அதற்குப் பின்பும் 4 குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி பத்துக்கும் அதிகமான குவாரிகள் ரகசியமாக இயங்கிவருகின்றன. அவற்றில் இருந்து கட்டுப்பாடற்ற வகையில் மலைவளங்கள் சூறையாடப்பட்டு, டன் கணக்கில் கேரளம் செல்கிறது.

கேரள அரசின் கனவுத் திட்டமான கே ரயில் திட்டத்திற்கு ஏராளமான மண், கல் வளம் தேவை. இது காசர்கோடு-திருவனந்தபுரம் இடையே மாநில அரசின் பங்களிப்புடன் பிரத்யேக ரயில் பாதை அமைக்கும் திட்டமாகும். இதேபோல் கேரளத்தின் விழிஞ்சத்திலும் துறைமுகப் பணிகள் நடந்துவருகிறது. அதேநேரத்தில் கேரள அரசு மலைகளை உடைக்க தடைவிதித்துள்ளது. அதனால் கேரளத்தை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் இருந்து கட்டுப்பாடற்ற முறையில் மலை வளங்கள் சூறையாடப்பட்டு வருகிறது. ஆனால் திமுக அரசோ, முந்தைய அதிமுக அரசுதான் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருப்பதாகக் கூறிவருகிறது.

குமரியில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவரும் நாம் தமிழர் கட்சியினரோ, கனிமவளக் கொள்ளை விவகாரத்தில் திமுகவும், அதிமுகவும் ஒரே நிலைப்பாட்டையே எடுக்கின்றன. சட்டப்பேரவையில் மூன்று குவாரிகளே இயங்குவதாகச் சொல்லிவிட்டு, அதன்பின்னர் நான்கு குவாரிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டனர். இருபதுக்கும் அதிகமான குவாரிகள் அனுமதி இல்லாமல் தினமும் மலைவளத்தை சூறையாடி கேரளம் கொண்டு செல்கின்றனர் என தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றனர்.

ஒருபகுதியில் கனிமவளக்கொள்ளை நடந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் ‘கனிமவளத்துறை உதவி இயக்குநர்’ அலுவலகத்தில் தகவல் சொல்லமுடியும். ஆனால் இவர்கள் உடனே ஆய்வுக்கு செல்வதற்கு வசதியாக இந்தத் துறைக்கு சொந்தமாக ஜீப் கூட இல்லை என்பதும் நாம் தமிழர் கட்சியின் குற்றச்சாட்டு.

திமுக, தன் அரசியல் கட்டமைப்பிலேயே சுற்றுச்சூழல் அணி என ஒன்றை வைத்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் குமரி மாவட்ட குவாரிகளின் இயக்கக்காலத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதி வரும் மே மாதத்தோடு முடிகிறது. அதன் பின்பு திமுக அரசு அனுமதியை தொடராமல் நிறுத்துவதுதான் குமரி மாவட்டத்தில் மிஞ்சியிருக்கும் சூழலைக் காப்பதற்கு துணை செய்யும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in