சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பில் இருப்பது என்ன?

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பில் இருப்பது என்ன?

2022-23-ம் நிதியாண்டிற்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை 6 ஆண்டுகளுக்குப் பிறகு மேயர் ப்ரியா தலைமையில், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் சர்பஜெயாதாஸ் நரேந்திரன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சொத்து வரி உயர்வு குறித்து பேச மேயர் அனுமதி தரவில்லை எனக் கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைய இணைப்பு வழங்கப்படும் எனவும், மாணவ, மாணவியரிடையே பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 72 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் விலையில்லா சீருடைகள் வழங்கப்படும் என்றும் மாணவிகளுக்கு 23 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் எனவும் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், பள்ளிகளை பராமரிப்பதற்காக 16 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ரூ.5.47 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை வளர்க்க பயிற்சி அளிக்கப்படும் என்றும் உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் வார்டு மேம்பாட்டு நிதிக்காக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் சுலபமாக சொத்து வரியை செலுத்தும் வகையில் QR Code அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in