சிவகங்கையில் வேலுநாச்சியார் பெண் காவலர் பயிற்சிப் பள்ளி - முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!

சிவகங்கையில் வேலுநாச்சியார்  பெண் காவலர் பயிற்சிப் பள்ளி - முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!

கடந்த ஆட்சியானது மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல், அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சியாக இருந்ததால் நலத்திட்டங்களை பாழ் படுத்தினார்கள் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டியில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சமத்துவபுரம் திறந்துவைத்த போது...
சமத்துவபுரம் திறந்துவைத்த போது...

அதன் பின்னர் சிவகங்கை காரையூரில் ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம், நீர்வளத்துறை சார்பில் ரூ. 119.68 கோடி மதிப்பிலன திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர். ரூ.24.77 கோடி மதிப்புள்ள 44 முடிவடைந்த நலப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.136.445 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "மண்ணைக் காக்க குடும்பம் குடும்பமாக தியாகம் செய்த பூமி இந்த சிவகங்கை. இந்திய விடுதலைக்காக போராடுவதில் நாங்கள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்த மண் இந்த சிவகங்கைச் சீமை. வீரத்திற்கு மருது சகோதரர்கள், கவிதைக்கு கவியரசர் கண்ணதாசன் என்று இந்த தமிழகத்திற்கு பெரும் மதிப்பிற்குரியவர்களை வாரி வழங்கிய மண் இது" என்று சிவகங்கையின் பெருமைகளை அடுக்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்க 2010-11 நிதியாண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில், தான் நம்முடைய (திமுக) அரசு அமைந்ததற்கு பிறகு அந்த சமத்துவபுரம் முழுமையாக பழுதுபார்க்கப்பட்டு, சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த அதிமுக அரசு, மக்களுக்கான திட்டங்களை எப்படியெல்லாம் பாழ் படுத்தியது என்பதை இந்த விழாவை சாட்சியாக வைத்து நீங்கள் பார்க்கலாம். கடந்த ஆட்சியானது மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல், அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சியாக இருந்ததால் தான் இப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்.

திமுக ஆட்சி அமைந்ததற்கு பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். செல்லும் இடமெல்லாம் வழி எங்கும் மக்கள் மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் இருப்பதை பார்க்கும் போது, அது தான் இந்த ஆட்சிக்கும், எனக்கும் கொடுக்கக்கூடிய நற்சான்று என்பதை பார்க்கிறேன். தேர்தலுக்கு முன்னால் எப்படி மக்களை சந்தித்தேனோ அதை விட அதிகமாக ஆட்சிக்கு வந்தபின் சந்தித்துக்கொண்டு இருக்கின்றேன். மக்களை தொடர்ச்சியாக சந்திப்பது ஆட்சியாளர்களின் மிக முக்கியமான இலக்கணமாக நான் கருதுகிறேன்.

அன்மையில் இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை கலைஞரின் சிலையை திறப்பதற்காக தமிழகம் அழைத்தோம். அவர், நம்முடைய ஆட்சியைப் பாராட்டி, கலைஞரைப் போல திறமையாக ஆட்சி செய்கிறேன் என்று கூறியுதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன். கலைஞரின் இடத்தை நான் நிரப்பிவிட்டேன் என்று கூறவில்லை, அவரது இடத்தை யாராலும், எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாது. ஆனால், அவரைப் போல செயல்பட்டுக் காண்பித்து இருக்கிறேன். ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியவற்றை இந்த ஒரு ஆண்டில் செய்திருக்கிறேன்.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், ‘நாங்கள் ஏற்கெனவே வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளீர்கள். தற்போது, ஒரு கோரிக்கை வைக்கிறோம். வீரமங்கை வேலுநாச்சியாரைப் போற்றும் வகையில், அவரது பெயரில் பெண் காவலர் பயிற்சி பள்ளி சிவகங்கையில் துவங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்துள்ளார். இந்த நியாயமான கோரிக்கையை, சென்னைக்கு சென்ற உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து பேசி அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in