உள்ளேயும், வெளியேயும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம்: வெங்கய்யா நாயுடு பகீர்!

உள்ளேயும், வெளியேயும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம்: வெங்கய்யா நாயுடு பகீர்!

குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்க நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார். வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் அவரை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.மோகன் வரவேற்றனர்.

கல்லூரியில், பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “ இந்தியா மற்றும் நட்பு நாடுகளின் ஆயுதப் படைகளின் எதிர்காலத் தலைவர்கள் மற்றும் குடிமைப்பணி அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் பங்களிப்பு போற்றத்தக்கது.

இன்று, இந்தியா மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத புவி -அரசியல் சூழலில் பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. வெளியிலும் உள்ளேயும் இருந்து சமச்சீர் மற்றும் சமச்சீரற்ற அச்சுறுத்தல்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். எனவே, எந்தவொரு சவாலையும் சமாளிக்கவும், எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலையும் உறுதியாக முறியடிக்கவும் நமது படைகள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும்,” இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் எந்தவொரு முயற்சியும் நமது பாதுகாப்புப் படைகளால் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்று தேசம் நம்புகிறது. இன்று போர்கள் போர்க்களங்களில் மட்டும் நடத்தப்படுவதில்லை. தகவல் மற்றும் இணையப் போர், ட்ரோன்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் மற்றும் விண்வெளி அடிப்படையிலான போர் முறைகள் அதிகரித்து வரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. எனவே, நமது பாதுகாப்புத் துறை இந்த புதிய மற்றும் வளர்ந்து வரும் மோதல் பகுதிகளில் கவனம் செலுத்தி திறன்களை மேம்படுத்த வேண்டும். இந்திய ராணுவத்தை எதிர்கால சக்தியாக வளர்ப்பதே நமது எண்ணமாகவும் திட்டமாகவும் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

“இன்று அரசியல் நிர்ப்பந்தங்கள், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை பாதுகாப்புச் சூழலின் சிக்கல்களை அதிகப்படுத்தியுள்ளன. எனவே, பிரச்சினைகளை ஆழமாகப் புரிந்துகொள்வது அவசியம். நமது ஆயுதப் படைகளின் எதிர்காலத் தலைமை மற்றும் வீரர்களை வடிவமைப்பதில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் மற்றும் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி மற்றும் அதன் ஆசிரியர்களின் முயற்சிகளை வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in