தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம்: கொந்தளித்த மக்கள்

தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம்: கொந்தளித்த மக்கள்

பொதுவாக நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு குறைவாக இருக்கும் என்பதுதான் வழக்கமான நடைமுறை. பல இடங்களில் வழங்கப்படும் அரிசி தரமாக இருப்பதில்லை என்பது புகார் கிளம்புவது வாடிக்கைதான். ஆனால் மண்ணெண்ணெய்யில் தண்ணீரை கலந்து அத்தனை விநியோகம் செய்தது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்தூர் நியாய விலைக் கடையில் நேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. அதனை வாங்கிய மக்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியரிடம் முறையிட்டுள்ளனர். ஊழியர் அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் குடிமைப் பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய்யை எடுத்து ஆய்வு செய்தனர். அப்போது அதில் அதிகத் தண்ணீர் கலந்திருந்தது தெரியவந்தது.

அதன் பின்னர், தண்ணீர் கலந்த மண்ணெண்ணைய்யை அனுப்பிய தனியார் நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு புதிதாக வேறு மண்ணெண்ணெய் வரவைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இதனையடுத்து மக்கள் சமாதானம் அடைந்தனர். இருப்பினும் நியாய விலைக் கடையில் தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் மக்கள், இனி இவ்வாறு நடக்காத வண்ணம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in