ஆசை ஆசையாக சாப்பிட்டனர்... வினையான கோழிக்கறி: மருத்துவமனையில் 50 பேர் அட்மிட்

ஆசை ஆசையாக சாப்பிட்டனர்... வினையான கோழிக்கறி: மருத்துவமனையில் 50 பேர் அட்மிட்

ஆசை ஆசையாய் சாப்பிட்ட கோழிக்கறியை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதோடு, மயக்கமடைந்தனர். உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் திருக்கோவிலூரில் நடந்துள்ளது.

திருக்கோவிலூரை அடுத்த மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (37) என்பவர் கரும்பு வெட்டும் பணிக்கான மேஸ்திரியாக இருந்து வருகிறார். விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யும்போது, கரும்பு வெட்டும் பணி முடிந்ததும், கிராமத்தில் உள்ள முனியப்பன் கோயிலில் பொங்கல் வைத்து, கரும்பு வெட்டிய தொழிலாளர்களுக்கு கறி விருந்து கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று கரும்பு வெட்டும் பணி முடிந்த நிலையில், வழக்கம் போல கோயிலில் பொங்கல் வைத்து கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு கோழிக்கறி விருந்து அளித்ததாகக் கூறப்படுகிறது. இதை சாப்பிட்டவர்களில் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை மணலுார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத் துறையினர் கிராமத்தில் முகாமிட்டு, 30-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். விசாரணையில் கோயிலுக்கு அருகே உள்ள பயன்படுத்தப்படாத கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சமைத்ததால், பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் தண்ணீர் மற்றும் கோழிக்கறி மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in