
வ.உ.சி யின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது வாழ்க்கை குறிப்பு அடங்கிய நகரும் புகைப்பட கண்காட்சியினை மதுரை மாவட்ட ஆட்சியர் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. மேலும் 75-வது சுதந்திர தின விழாவை மத்திய அரசு சுதந்திர திருநாள் அமுத பெரு விழா ஆண்டாக கடைபிடித்து வருகிறது. இவற்றை ஒட்டி மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட வ.உ.சிதம்பரனாரைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையிலும், அவரது 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்து அமைக்கப்பட்டு இருந்நது. இதனை இன்று காலை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கொடி அசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட பேருந்தில் அவரது மார்பளவு சிலை மற்றும் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய தகவல் பலகை ஆகியவை பொதுமக்களின் பார்வைக்காக உள்ளன. குறிப்பாக, அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டபோது அவரது பெயர் கொண்ட சிறைச்சாலை ஆவணம் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் ஆகியவையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த கண்காட்சி பேருந்து மதுரை அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, தியாகராஜர் கலைக் கல்லூரி உள்ளிட்ட மதுரையிலுள்ள கல்லூரிகளுக்கு நேரில் சென்று வரும் 12-ம் தேதி வரை அவரது வாழ்க்கை வரலாற்றினை காட்சிப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.