பேருந்திலிருந்து குதித்த மாணவி உயிரிழப்பு: ஓட்டுநர், நடத்துநர் கைது

 மாணவி நவ்யாஸ்ரீ
மாணவி நவ்யாஸ்ரீ

ஓடும் பேருந்திலிருந்து குதித்த பள்ளி மாணவி படுகாயமடைந்து உயிரிழந்திருக்கிறார். இறங்க வேண்டிய நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காது விரைந்தததே இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

கரோன பரவல் காரணமாக, பொதுத்தேர்வு உள்ள வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஓசூர் அருகிலுள்ள சினிகிரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நவ்யாஸ்ரீ என்ற பிளஸ் 2 மாணவி, கெலமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று(ஜன.3) பேருந்தில் சென்றுள்ளார். அதேபோல மாலை பள்ளி முடிந்ததும், சினிகிரிப்பள்ளி செல்வதற்காக தர்மபுரி பேருந்தில் ஏறி உள்ளார்.

சினிகிரிப்பள்ளியை கடக்கும்போது, நவ்யாஸ்ரீ இறங்க வேண்டிய நிறுத்ததில் பேருந்து நிற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பதட்டமடைந்த நவ்யாஸ்ரீ ஓடும் பேருந்திலிருந்து இறங்க முற்பட்டிருக்கிறார். அப்போது தடுமாறி சாலையில் விழுந்த மாணவியின் கை மற்றும் கால்களில் பேருந்தின் பின்சக்கரம் ஏறியது. படுகாயமடைந்த நவ்யாஸ்ரீ, உத்தனப்பள்ளி, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்காக அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதற்கிடையே சினிகிரிப்பளி நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, இறங்க மறந்த மாணவி தாமதமாக சுதாரித்துக்கொண்டு ஓடும் பேருந்திலிருந்து இறங்க முற்பட்டதே, விபத்துக்கு காரணம் என அரசுப் போக்குவரத்து மண்டல அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

கிராமங்களை இணைக்கும் அரசுப் பேருந்துகள் பொதுநோக்கோடு சேவையாற்றும் வகையிலே இயக்கப்படுகின்றன. அங்கேயும் உரிய நேரத்தில் பேருந்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தாலும், கிராமப்புற மக்கள் மீதான அரசுப் பேருந்து பணியாளர்களின் அலட்சியத்தாலும், குறிப்பாக இலவச பஸ் பாஸ் மூலம் பயணிக்கும் மாணவ மாணவிகள் மீதான அக்கறையின்மையும் இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு காரணமாகின்றன.

மாணவி நவ்யாஸ்ரீ இறந்ததை அடுத்து, விபத்துக்கு காரணமான பேருந்தின் ஓட்டுநர் வெங்கடேஷ் மற்றும் நடத்துநர் குமார் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, உத்தனப்பள்ளி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அரசுப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தங்கள் பணியாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவது, சிற்றூர்கள், கிராமங்களின் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் வேகத்தடைகளை வரையறுப்பது, பேருந்தில் பயணிக்கும் மாணவ மாணவிகளுக்கான போக்குவரத்து விதிமுறைகளை பள்ளிகளில் பயிற்றுவிப்பது போன்றவை இதுபோன்ற விபரீதங்களை இனிவரும் நாட்களில் தடுப்பதற்கு உதவக்கூடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in