கண்ணில் கருப்பு துணி... வாயில் மாஸ்க்... கையில் மைக்... தெறிக்கவிட்ட விசிக கவுன்சிலர்

கண்ணில் கருப்பு துணி... வாயில் மாஸ்க்... கையில் மைக்... தெறிக்கவிட்ட விசிக கவுன்சிலர்

சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டியபடி விசிகவைச் சேர்ந்த 44வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவர்மன் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 60 மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 44வது கோட்ட மாமன்ற உறுப்பினரான மு. இமயவர்மன் (எ) இமயவர்ம நெடுஞ்சேரலாதன் கருப்பு துணியால் கண்ணைக் கட்டியபடி கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது தீர்மானம் - 1 என்ற தலைப்பில் இந்த மாமன்றத்தில் 8 பட்டியலின உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 8 பேரில் 7 பேர் திமுக சார்பிலும், ஒருவர் விசிக சார்பிலும் தேர்தெடுக்கப்பட்டுள்ளோம். அதேபோல் இந்த மாமன்றத்தில் 3 இஸ்லாமியர்கள் மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 2 பேர் திமுக சார்பிலும், ஒருவர் சுயேட்சையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஒருவரும் இந்தியன் முஸ்லீம் லீக்கில் இணைந்துள்ளார். இந்த மாமன்றத்திற்கு திமுக சார்பில் 47 பேர் மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர். சுயேச்சையாக தேர்வு செய்யப்பட்ட இருவரும் திமுகவில் இணைந்ததால் திமுக மாமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி சேலம் மாநகராட்சி மாமன்றத்தில் திமுக சார்பில் 49, அதிமுக சார்பில் 7, காங்., சார்பில் 2, விசிக, இந்தியன் முஸ்லீம் லீக் சார்பில் தலா 1 உறுப்பினர் என மாமன்றத்தில் இடம் பெற்றுள்ளோம்.

இந்த மாமன்ற உறுப்பினர்களில் 8 பேர் பட்டியலின உறுப்பினர்கள், 3 பேர் இஸ்லாமிய உறுப்பினர்கள். ஆனால், அதிகார பகிர்வு என்ற அடிப்படையில் உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், 4 மண்டல குழுத் தலைவர்கள், 6 நிலைக்குழுத் தலைவர்கள், 1 நியமனக்குழு உறுப்பினர், எதிர்கட்சித் தலைவர் என 14 பேரில் ஒருவர் கூட பட்டியலினத்தையோ அல்லது இஸ்லாமியராகவோ இல்லை என்பதை நினைக்கும்போது கடுமையான வருத்தம் ஏற்படுகிறது.

உடனடியாக அதிகார பகிர்வில் பட்டியலின மாமன்ற உறுப்பினர்களுக்கும், இஸ்லாமிய மாமன்ற உறுப்பினருக்கும் இடமளிக்க வேண்டும் என முன்மொழிகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இது மாமன்ற கூட்டத்தில் ‘சலசலப்பை’ ஏற்படுத்தியது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களை ஆளுங்கட்சியினர் கைப்பற்றிய பிரச்சினை ஒரு வழியாக ஓய்ந்துள்ளது.

இச்சூழலில் திமுக கூட்டணியில் உள்ள சேலம் மாமன்ற விசிக உறுப்பினர், ஆளுங்கட்சி தரப்பு மீது எழுப்பியுள்ள குற்றச்சாட்டு மழை விட்டும் தூவானம் விடாத கதையாக உள்ளது. அதேவேளையில் விசிக உறுப்பினர் எழுப்பியுள்ள பிரச்சினை கவனிக்கத்தக்கது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in