பயிற்சிக்கு வந்த இடத்தில் பறிபோன பெண் விஏஓ உயிர்: திருமணமான 8 மாதத்தில் நடந்த சோகம்

புவனேஸ்வரி
புவனேஸ்வரி

தஞ்சாவூரில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்ககுக்கான நிர்வாக பயிற்சியில் கலந்து கொள்ள வந்திருந்த பெண் கிராம நிர்வாக அலுவலர் பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் இன்று நடைபெற்றிருக்கிறது.

தஞ்சாவூர் கோட்ட அளவிலான கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி, தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 9-ம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ள இப்பயிற்சியில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதில், தஞ்சாவூர் அருகே கரந்தை வேலூர் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி (26), என்பவர் வழக்கம் போல பயிற்சிக்காக இன்று காலை 11 மணிக்கு பள்ளிக்கு வந்தார். அப்போது பள்ளி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தங்களது சக ஊழியர் ஒருவர் இப்படி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததைக் கண்ட மற்றும் ஊழியர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இவருக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகியுள்ளது. இவரது கணவர் அரவிந்த் வெங்கடேஷ் குஜராத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

கிராம நிர்வாக அலுவலரின் இந்த எதிர்பாராத மரணம் குறித்து தஞ்சாவூர் மேற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in