
அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்ட ஆதரவற்றவரை அரவணைத்த உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை, ஒரு மாதத்தில் அவரை நடக்கச் செய்து சாதித்துக் காட்டியுள்ளனர் மருத்துவர்கள்.
பேரையூர் அருகே உள்ள பூசலப்புரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு, தாய், தந்தை யாருமில்லாத நிலையில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி நடந்து செல்லும்போது தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆதரவற்றவராக சாலையில் கிடந்தவரை அருகிலிருந்தவர்கள் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் இடதுபுற தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மருத்துவர்கள் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து ஒரு மாதமாக சிறப்பான சிகிச்சை அளித்து அவர் நடக்கக் கூடிய அளவிற்கு முன்னேற்றமடையச் செய்துள்ளனர். மேலும், செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதோடு, உயர் சிகிச்சைக்காக மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இத்தனைக்கும், இவரிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த ஒரு ஆவணமும் இல்லாத நிலையில், அரசு மருத்துவமனையை நம்பி வந்தவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர் அரசு மருத்துவர்கள்.