கன்டெய்னர் மோதி உருக்குலைந்த கார்... பறிபோன உயிர்கள்: திருமணத்துக்கு சென்றபோது நடந்த துயரம்

கன்டெய்னர் மோதி உருக்குலைந்த கார்... பறிபோன உயிர்கள்: திருமணத்துக்கு சென்றபோது நடந்த துயரம்
விபத்தில் உருக்குலைந்த கார்

திருமணத்துக்கு வந்தவர்களின் காரின் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி
விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி

விழுப்புரத்தைச் சேர்ந்த முத்து என்பவர் புதுச்சேரியில் நடைபெற உள்ள ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை காரில் புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை குமாரசாமி என்ற ஓட்டினார். அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் நெடுஞ்சாலை ரெட்டியார்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி, அதைத் தாண்டி எதிர் புறத்தில் வந்த காரின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் லாரியை விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனங்களை அகற்றி உடல்களை மீட்டனர்.

இந்த விபத்து குறித்த காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வந்து விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படங்கள்: எம்.சாம்ராஜ்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in