மலேசியாவுக்குப் புறப்பட்ட பெண் விபத்தில் பலி!

சீர்காழி அருகே நிகழ்ந்த பரிதாபம்
மலேசியாவுக்குப் புறப்பட்ட பெண் விபத்தில் பலி!
லாரிக்கு கீழே உருக்குலைந்து கிடக்கும் கார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மலேசியா செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்று கொண்டிருந்த பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் பதர் நிஷா ( 72) இவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியா செல்வதற்காக இன்று காலை வாடகை காரில் திருவாரூரில் இருந்து சென்னைக்குச் சென்று கொண்டிருந்தார். கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசந்தர் (44) என்பவர் காரை ஓட்டிச் சென்றார்.

செல்லும் வழியில் நடராஜபிள்ளைச்சாவடி அடுத்த ஆலங்காடு பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது பின்னால் சீர்காழி நோக்கி வேகமாக வந்த டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னே நின்ற காரின் மீது மோதியதில் கார் சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. ஒரு வீட்டின் சுவற்றை உடைத்துக்கொண்டு சென்ற லாரி காரின் மீது ஏறி நின்றது.

பொக்லைன் மூலம் மீட்கப்படும் கார்
பொக்லைன் மூலம் மீட்கப்படும் கார்

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பதர்நிஷா, கிருஷ்ணசந்தர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஏறியதால் கார் உருக்குலைந்து போய் கிடந்தது. தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் மற்றும் கடப்பாரையால் வெட்டி அகற்றி காரை வெளியில் எடுத்தனர். காரில் உருக்குலைந்து சிக்கியிருந்த உடல்களை மீட்ட போலீஸார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள திருவெண்காடு போலீஸார், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி-யான நிஷா விபத்து குறித்து விசாரணை நடத்தினார். இந்த விபத்தால் நாகை - சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

Related Stories

No stories found.