பாட்டியின் கண்முன்னே நீரில் மூழ்கி பலியான பேரன், பேத்தி

பாட்டியின் கண்முன்னே நீரில் மூழ்கி பலியான பேரன், பேத்தி

நாமக்கல் அருகே பழையபாளையம் கிராமத்தில் பாட்டியின் கண் முன்னே ஏரியில் தவறி விழுந்த சிறுமியும், அவரது சகோதரனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நாமக்கல் சேந்தமங்கலம் அருகே சிவநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கருப்பசாமி (36), பாலன் (32). இவர்களில் கருப்பசாமிக்கு சஞ்சீவி (11) மிதிலேஷ் (8) என்ற 2 மகன்களும், பாலனுக்கு கனிஷ்கா (8) என்ற மகளும், மதன்( 7) என்கிற மகனும் உள்ளனர்.

சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள்
சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள்

இந்த நான்கு குழந்தைகளும் இன்று விடுமுறை தினம் என்பதால் சிவநாயக்கன்பட்டி அருகே பழையபாளையத்தில் உள்ள தங்களது பாட்டி செல்லம் வீட்டுக்குச் சென்றிருந்தனர். இன்று மதியம் நால்வரும் பாட்டி செல்லத்துடன் பழையபாளையம் ஏரிக்கரை மீது நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பாலனின் குழந்தைகள் கனிஷ்கா (8), மதன் (7) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஏரியில் தவறி விழுந்தனர்.

அவர்களைப் பிடிக்க முற்பட்ட கருப்பசாமியின் குழந்தைகளான சஞ்சீவி (11), மிதிலேஷ் (8) ஆகிய இருவரும் அடுத்தடுத்து தண்ணீரில் விழுந்தனர். இந்த நால்வரும் நீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தனர். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாட்டி செல்லம் ஏரியில் குதித்து சஞ்சீவி, மிதிலேஷ் ஆகியோரை மீட்டார். அடுத்ததாக அவர் மீட்க முயல்வதற்குள் கனிஷ்கா, மதன் ஆகிய இருவரும் பரிதாபமாகத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தன் கண் முன்னேயே பேத்தியும் பேரனும் நீரில் மூழ்கி உயிரிழந்ததைக் கண்ட பாட்டி செல்லம் கதறி அழுதது அங்கிருந்தோரைக் கண்கலங்க வைத்தது. அவர்களது உடல்களை அங்கிருந்தோர் மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இருவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பழையபாளையம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.