`இதை இப்படியே விட்டால் பல ஊர்களில் இதையேதான் அவர்கள் செய்வார்கள்'

பொன்னியின் செல்வன் நாடக உரிமையாளர் மீது திருச்சி சிவாவின் மகன் புகார்
`இதை இப்படியே விட்டால் பல ஊர்களில் இதையேதான் அவர்கள் செய்வார்கள்'
சூர்யா சிவா

பொன்னியின் செல்வன் நாடகத்தை நடத்தும் டி.வி.கே கல்சுரல் அகாடமியின் உரிமையாளர் ரமேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. வரலாறு சிறப்புமிக்க ஒரு நாடகத்தை மக்களிடம் காட்சிப்படுத்தும் நாடக உரிமையாளர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டு அவரிடம் பேசினேன்.

``திருச்சி தேவர் ஹாலில் நடைபெற்ற அந்த நாடகத்தை மிகுந்த ஆவலோடு நானும் பார்க்கப் போனேன். அருமையான நாடகம். மிக சிறப்பான முயற்சி. அந்த காலத்தில் நாடகம் எப்படி நடந்தது என்பது இப்போதுள்ள மக்களுக்கு புரியும்படியாக நாடகத்தை அமைத்திருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் கதையை படிக்காதவர்களுக்கும்கூட இந்த நாடகத்தை பார்த்தால் அந்த கதை புரிந்து விடும் அளவிற்கு மிக சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். அந்த நாடகக் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

ஆனால் இவ்வளவு சிறப்புகளுக்கும் மத்தியில் தமிழக முதல்வரை தேவையற்று விமர்சித்திருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. சிறப்பான முறையில் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிற தற்போதைய முதல்வரை அந்த நாடகத்தில் தேவையில்லாமல் விமர்சித்திருக்கிறார்கள், கிண்டலடித்து இருக்கிறார்கள். அதை நானே நேரில் சென்று பார்த்து உணர்ந்தேன்.

அப்போதே நாடகத்தை நிறுத்தியிருக்க முடியும். இருந்தாலும் அது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்பதால் அதை செய்யவில்லை. நாடகம் முடிந்ததும் அந்த நாடகத்தை நடத்துபவர் யார் என்று கேட்டு அவரைச் சந்திக்க முயற்சி செய்தேன். அவர் சந்திக்க தயாராக இல்லை. அதேபோல வந்தியத்தேவன் என்ற பாத்திரம் தான் தற்போதைய முதல் அமைச்சரை கிண்டலாக பேசியிருந்தார். அவரையாவது சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

அதனையடுத்துத்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தேன். இதற்காக மலைக்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்றபோது அவர்கள் இந்த புகாரை எடுக்க வில்லை. அதனால் ஆணையரிடம் கொடுக்க நேர்ந்தது. விவரத்தை கேட்டுக் கொண்ட ஆணையர் இணை ஆணையரிடம் அனுப்பி இதனை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கச் சொன்னார். இணை ஆணையரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்'' என்றார்.

எல்லாம் சரிதான், முதல்வரை அப்படி என்னதான் கிண்டல் அடித்தார்கள்?

சமகால அரசியலை விமர்சிக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. அதில் அதில் ஒன்றுதான் தமிழக முதல்வரை கேலி செய்வது. தற்போது இருக்கும் முதல்வர் எதை எழுதினாலும் தவறாக எழுதுகிறார், எதைப் பேசினாலும் தவறாக பேசுகிறார் என்று கேலியாக வந்தியத்தேவன் பாத்திரம் சொல்கிறது. பொன்னியின் செல்வன் கதையில் வந்திய தேவனுக்கும் அருள்மொழி வர்மனுக்கும் இடையே நடக்கும் எந்த ஒரு உரையாடலிலும் முதல்வரைப் பற்றிய பேச்சே வராது. அப்படி இருக்கும் போது தேவையில்லாத இடைச்செருகலாக ஏன் இதை பேசினார்? இதற்கான பின்புலம் என்ன என்பதை விசாரித்து வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். தேவையில்லாத இந்த வசனத்தை இடம் பெறச் செய்திருக்கும் அந்த நாடக அகாடமியின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிற மக்களின் முதல்வரை இப்படி இவர்கள் இஷ்டத்துக்கு விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை இப்படியே விட்டால் அந்த நாடகம் இன்னும் பல ஊர்களில் அடுத்தடுத்து நடைபெற்ற இருக்கிறது. அங்கெல்லாம் இதையேதான் அவர்கள் செய்வார்கள். அதனால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தீர்க்கமாக சொன்னார் சூர்யா.

Related Stories

No stories found.