அரசாங்கம் தீர்வு காண வேண்டும்- குமுறும் பாதிக்கப்பட்ட மக்கள்

அரசாங்கம் தீர்வு காண வேண்டும்- குமுறும் பாதிக்கப்பட்ட மக்கள்

மதுரை- ராமநாதபுரம் பைபாஸ் சாலை அமைக்கப்பட்ட பிறகு திருப்பாச்சேத்தியில் வெறும் 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்படுவதாகவும். ஏனைய பேருந்துகள் ஊரிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோல்கேட்டில் பயணிகளை இறக்கி விட்டுச் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

மதுரை - ராமநாதபுரம் - தனுஷ்கோடி நான்கு வழிச்சாலைக்குத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் முதற்கட்டமாக மதுரை - ராமநாதபுரம் (என்.எச்.49) ரோட்டில் விரகனுார் ரிங்ரோடு - பரமக்குடி பைபாஸ் வரை நான்கு வழிச்சாலையும், பரமக்குடி -- ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை (இ.சி.ஆர்) வரை இருவழிச் சாலை என 120 கி.மீ., தூரத்திற்குச் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது.

மதுரை விரகனுார் ரிங் ரோட்டில் இருந்து ராமநாதபுரம் வரை பணிகள் முழுமை பெற்றுள்ளன. இதில் நகருக்குள் வாகனங்கள் செல்வதின் மூலம் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க சிலைமான், ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், ராமநாதபுரம், பரமக்குடி என 9 இடங்களில் பைபாஸ் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் ஒரு நாளைக்கு வெறும் 10 பேருந்துகள் மட்டுமே ஊருக்குள் வருவதாகவும் மீதும் ஓடக்கூடிய அனைத்து பேருந்துகளும் திருப்பாச்சேத்தி டோல்கேட் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், டோல்கேட்டிலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஊருக்குள் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து திருப்பாச்சேத்தி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து காமதேனுவிடம் கூறுகையில், "மதுரை- ராமநாதபுரம் பைபாஸ் சாலை வருவதற்கு முன்பாக 1 டூ 1, 1-2-3, 1-2-6 போன்ற பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்துப் பேருந்துகளும் திருப்பாச்சேத்திக்குள் நிறுத்தப்பட்ட பிறகு ராமநாதபுரத்திற்கு அல்லது மதுரைக்குச் செல்லும். ஆனால், இந்த பைபாஸ் சாலை அமைக்கப்பட்ட பிறகு 2 ஆண்டுகளாக வெறும் 10 பேருந்துகள் மட்டுமே ஊருக்குள் வந்து செல்கிறது. காலை 8 மணிக்கு ஒரு பேருந்தும், அதைத் தொடர்ந்து 10.30 ஒரு பேருந்தும், மதியம், மாலை வேளைகளில் சில வண்டிகளும் வந்து செல்கின்றன. இரவு நேரங்களில் எந்த பேருந்தும் ஊருக்குள் வருவதில்லை. பெரும்பாலான பேருந்துகள் திருப்பாச்சேத்தி டோல்கேட் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன. இதனால், முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், கல்லூரிக்குச் செல்லக்கூடிய மாணவ- மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பெரும்பாலும் ஊரிலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் நடந்து திருப்பாச்சேத்தி டோல்கேட் வந்தடைந்து அங்கிருந்து பேருந்தைப் பிடித்து ஏனைய ஊர்களுக்குச் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், புகார் தெரிவித்த அந்த ஒரு நாள் மட்டும் பேருந்துக்கள் ஊருக்குள் நின்று செல்கின்றன. ஏனைய நாட்களில் பழைய நடைமுறையே தொடர்கிறது. எனவே, விரைந்து அரசாங்கம் இவ்விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in