நீலகிரியில் மூவர் போட்டியின்றி தேர்வு; இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நித்யா
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நித்யா

கேத்தி, பிக்கட்டி மற்றும் அதிகரட்டி பேரூராட்சிகளில் மூன்று கவுன்சிலர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் ஆகிய 4 நகராட்களில் உள்ள 108 வார்டுகளுக்கும், அதிகரட்டி, பிக்கட்டி, தேவர்சோலை, உலிக்கல், ஜெகதளா, கேத்தி, கீழ்குந்தா, கோத்தகிரி, நடுவட்டம், ஓவேலி மற்றம் சோலூர் ஆகிய 11 பேரூராட்சிகளில் உள்ள 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி கடந்த 4-ம் தேதி முடிவடைந்தது.

வேட்பு மனு பரிசீலனை முடிவடைந்து மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் உள்ள 108 வார்டுகளுக்கு 601 பேரும், 11 பேரூராட்சிகளில் உள்ள 186 வார்டுகளுக்கு 781 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டது. இதன் பேரில் உதகை நகராட்சியில் 5 பேர், குன்னூர் 4, கூடலூரில் 5 மற்றும் நெல்லியாளத்தில் 35 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

தற்போது உதகை நகராட்சியில் 36 கவுன்சிலர் பதவிகளுக்கு 198 பேர், குன்னூர் நகராட்சியில் உள்ள 30 கவுன்சிலர் பதவிகளுக்கு 141 பேர், கூடலூரில் உள்ள 21 வார்டுகளுக்கு 116 மற்றும் நெல்லியாளம் நகராட்சியில் உள்ள 21 கவுன்சிலர் பதவிகளுக்கு 84 பேர் என மொத்தம் 539 பேர் போட்டியிடுகின்றனர்.

பேரூராட்சிகளில் உள்ள 186 வார்டுகளில் கேத்தி, பிக்கட்டி மற்றும் அதிகரட்டி பேரூராட்சிகளில் மூவர் போட்டியின்றி தேர்வு பெற்றதால், தற்போது 183 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. பிக்கட்டி பேரூராட்சி 10-ம் வார்டில் சுயேச்சை வேட்பாளர் ஆர்.நித்யா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதே போல அதிகரட்டி பேரூராட்சியில் 12-ம் வார்டில் சுயேச்சை வேட்பாளர் சு.மனோகரன் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதால், பிக்கட்டி 10-ம் வார்டு மற்றும் அதிகரட்டி 12-ம் வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்த நித்யா மற்றும் மனோகரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட 7-ம் வார்டில் நித்யா ராஜேஷ் மற்றும் மீனா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள மனோகரன்
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள மனோகரன்

இதில், மீனா தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால், நித்யா ராஜேஷ் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு கேத்தி, பிக்கட்டி மற்றும் அதிகரட்டி பேரூராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டன. அதிகரட்டியில் பேரூராட்சியில் 17 வார்டுகளில் 16 பேர் வாபஸ் பெற்ற நிலையில் 59 பேர் களத்தில் உள்ளனர். பிக்கட்டி பேரூராட்சியில் 14 வார்டுகளில் 6 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் தற்போது 45 பேர் போட்டியிடுகின்றனர்.

தேவர்சோலையில் உள்ள 18 வார்டுகளில் இருவர் வாபஸ் பெற்ற நிலையில் தற்போது 76 பேர் போட்டியிடுகின்றனர். உலிக்கலில் உள்ள 18 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 5 பேர் வாபஸ் பெற்றதால் தற்போது 70 பேர் போட்டியிடுகின்றனர். ஜெகதளாவில் உள்ள 15 வார்டுகளில் 3 பேர் வாபஸ் பெற்றதால் 66 பேர் போட்டியிடுகின்றனர். கேத்தியில் 17 வார்டுகளில் 6 பேர் வாபஸ் பெற்றதால் 68 பேர் போட்டியிடுகின்றனர். கீழ்குந்தாவில் 15 வார்டுகளில் 5 பேர் வாபஸ் பெற்றதால் 54 பேர் போட்டியிடுகின்றனர். கோத்தகிரியில் உள்ள 21 வார்டுகளில் 4 பேர் வாபஸ் பெற்ற நிலையில் 121 பேர் போட்டியிடுகின்றனர். நடுவட்டத்தில் உள்ள 15 வார்டுகளில் 3 பேர் வாபஸ் பெற்றதால் 43 பேர் போட்டியிடுகின்றனர். ஓவேலியில் உள்ள 18 வார்டுகளில் 5 பேர் வாபஸ் பெற்ற நிலையில் 60 பேரும், சோலூரில் உள்ள 15 வார்டுகளுக்கு 52 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் 183 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 781 பேரில் 104 பேர் வாபஸ் பெற்றதால், 714 பேர் களத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in