சாலைத் தடுப்பில் மோதிய கார்... சரிந்து விழுந்த உடல்கள்!

சாலைத் தடுப்பில் மோதிய கார்...
சரிந்து விழுந்த உடல்கள்!
விபத்துக்குள்ளான கார்

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய எல்லையில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், காரில் சென்ற மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்தார். இவரது மனைவி லதா வாலிபால் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். கமலக்கண்ணன் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கலில் இருந்து சென்னைக்கு கார் மூலம் வந்துகொண்டிருந்தார். காரில் மனைவி லதா, லதாவின் அம்மா வேம்பு , லதாவின் அண்ணன் ராமச்சந்திரன், கமலக்கண்ணனின் சித்தி மணிமேகலை ஆகியோரும் உடன் பயணித்தனர்.

கமலக்கண்ணன் காரை ஓட்டிவந்த நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள விஜயகோபாலபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக கார் சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதியது. இதனால் நிலைகுலைந்த கார் சுமார் 100 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் கமலக்கண்ணன், அவரது மனைவி லதா, மாமியார் வேம்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லதாவின் அண்ணன் ராமச்சந்திரன், கமலக்கண்ணனின் சித்தி மணிமேகலை ஆகியோர் படுகாயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு தகவலறிந்து வந்த பாடாலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.