தாமதமாக நீதிமன்றம் வந்ததால் கேட்கும் தொகை கிடையாது!

3 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை மதித்தவருக்கு கிடைத்த தீர்ப்பு
தாமதமாக நீதிமன்றம் வந்ததால் கேட்கும் தொகை கிடையாது!

போலி பேரிச்சம் பழ வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பேரிச்சம் பழங்கள் அழுகி துர்நாற்றம் வீசி வரும் நிலையிலும், 3 ஆண்டுகளாக பாதுகாத்து வரும் தனியார் குளிர்ப்பதன நிறுவனத்துக்கு ரூ.1.25 லட்சம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி குளிர்ப்பதன கிடங்கு நிறுவனத்தின் மேலாளர் எஸ்.டி.திலகராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

‘துவாக்குடி காவல் சரகப் பகுதியில் 2018-ல் சாதாரண பேரிச்சம் பழத்தை உயர் ரகப் பேரிச்சம் பழம்போல் விற்கப்படுவதான புகாரின்பேரில், போலீஸார் தலா 12 பேரிச்சம் பழ பாக்கெட் கொண்ட 500 அட்டைப் பெட்டிகளை பறிமுதல் செய்தனர். இந்தப் பழங்களை வழக்கு முடியும்வரை எங்கள் குளிர்ப்பதனக் கிடங்கில் பாதுகாத்து வைத்திருக்க, திருச்சி 6-வது நீதித் துறை நடுவர் 31.10.2018-ல் உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸார் பேரிச்சம் பழப் பெட்டிகளை எங்கள் குளிர்ப்பதனக் கிடங்கில் வைத்தனர். அதற்கு இதுவரை வாடகை தரவில்லை. தற்போது அந்தப் பழங்கள் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுகின்றன. இதனால் அந்தப் பழங்களை அகற்றவும், வாடகை பாக்கி ரூ.3.54 லட்சத்தை வழங்கவும் உத்தரவிட வேண்டும்’. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

‘மனுதாரர் பேரிச்சம் பழத்தை இப்போதுவரை குளிர்ப்பதனக் கிடங்கில் பாதுகாத்து வருகிறார். துரதிர்ஷ்டவசமாக வழக்கும் குளிர்ப்பதனப் பெட்டிக்குள் போய்விட்டது. வழக்குப் பதிவுசெய்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டன. விரைவில் அழுகும்பொருட்களை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதால் பலனில்லை. இருப்பினும் மனுதாரர் மாதம் ரூ.7,500 வாடகை கிடைக்கும் என நம்பியிருந்துள்ளார். ஆனால், அவருக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. விரைவில் அழுகும் பொருட்களை விற்க நீதித் துறை நடுவருக்கு அதிகாரம் உள்ளது. பேரிச்சம் பழம் அழுகும் பொருட்கள் பட்டியலில் வருகிறது. குற்றத்தை நிரூபிக்க போலி லேபிள்கள், அட்டைகள் போதுமானது. எந்த வகையில் பார்த்தாலும் பேரிச்சம் பழங்களை வழக்கு முடியும்வரை பாதுகாக்க வேண்டும் என்ற உத்தரவு தவறானது.

மனுதாரர் தற்போது ரூ.3.54 லட்சம் கேட்கிறார். மனுதாரருக்கு நீதித் துறை நடுவர் மன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு வாய்ப்புகள் இருந்தும், தாமதமாக நீதிமன்றம் வந்துள்ளார். இதனால் மனுதாரருக்கு கேட்கும் தொகையை வழங்க முடியாது. பாதிக்கப்பட்டோர் நிதியிலிருந்து மனுதாரருக்கு ரூ.1.25 லட்சத்தை நீதித் துறை நடுவர் மன்றம் 4 வாரத்தில் வழங்க வேண்டும்’. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in