`நானும் இலங்கை தமிழர்களுக்காக கொடுக்கிறேன்'- நெகிழவைத்த 2-ம் வகுப்பு மாணவன்

`நானும் இலங்கை தமிழர்களுக்காக கொடுக்கிறேன்'- நெகிழவைத்த 2-ம் வகுப்பு மாணவன்
இலங்கை தமிழர் நலனுக்காக உண்டியல் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும் சிறுவன்.

"அப்பா 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட இங்கே இவ்வளவு கஷ்டப்படுறேன்" தந்தை கூறிய ஒற்றை வார்த்தையால் மனமுவந்து இலங்கை தமிழர்களுக்கு தனது உண்டியல் சேமிப்பை அரசுக்கு அளித்துள்ளார் இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுவன்.

மதுரை மாவட்டம், மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார். மினரல் வாட்டர் சப்ளை செய்து வரும் இவர் சமூக பணிகளும் ஆற்றி வருகிறார். இவரது இரண்டாம் வகுப்பு பயிலும் மகன் சுதர்சன் தனது உண்டியலில் சேமித்து வைத்த பணமான ரூ. 611 மற்றும் அசோக் குமாரின் ஒரு நாள் வருமானமான ரூ.600 என மொத்தம் ரூ. 1,211ஐ இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் காசோலையாக வழங்கினார்.

இது குறித்து அசோக்குமார் கூறுகையில், "நானும் என் மகனும் இணைந்து படியில் பயணம் செய்யும் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 'படியில் பயணம், நொடியில் மரணம்' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். அதேபோன்று பனை விதை நடவு மற்றும் பனை பந்து நடவு போன்றவற்றிலும் நாங்கள் இருவரும் ஈடுபட்டு வருகிறோம்.

இச்சூழலில்தான் தமிழக முதல்வர் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று அறிவித்திருந்தார். அப்போது, என் மகனிடம் "அப்பா, 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட இங்கே இவ்வளவு கஷ்டப்படுறேன். ஆனால், இலங்கையில் 250 ரூபாய்க்கும் அதிகமா பெட்ரோல் விற்பனையாகுது. அங்கே இருக்கிறவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க. அதனால, நான் என்னோட ஒரு நாள் வருமானமான 600 ரூபாயை தமிழக அரசுக்கு கொடுக்கலாம்னு இருக்கிறேன்" என்று கூறினேன்.

உடனடியாக அப்போ, "என்னிடம் உள்ள உண்டியல் பணமான 611 ரூபாய நானும் இலங்கை தமிழர்களுக்காக கொடுக்கிறேன்" என்று தானாக முன்வந்து மனமுவந்து அளித்தான். நான் இதற்கு முன்பு எனது மகனை அழைத்துச் சென்று சமூக சேவையில் ஈடுபடுத்தியதன் விளைவாகவே இப்போது, இவ்வுதவியை செய்துள்ளான்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

Related Stories

No stories found.