வெள்ளம் ஒண்ணும் செய்யாது: ஆற்றின் நடுவே அச்சமின்றி வாழும் மக்கள்!

வெள்ளம் ஒண்ணும் செய்யாது: ஆற்றின் நடுவே அச்சமின்றி வாழும் மக்கள்!
முதலைமேடு திட்டு

சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் அனைத்து ஊர்களிலும் ஊருக்குள் வெள்ளம் வந்துவிட்டதாக கதறிக் கொண்டிருக்கும் இந்தக் கனமழை நாளில், ஆற்றுக்குள்ளேயே இருக்கும் ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள், ஆற்றில் ஒன்றரை லட்சம் கன அடிக்கு வெள்ளம் வந்து கொண்டிருந்தபோதும் அதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல், இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு செல்லும் வெள்ளம்
கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு செல்லும் வெள்ளம்
வீட்டின் மாடியில் வைக்கோல்

நீரின் வழித்தடத்தையும், அதன் போக்கையும் சரியாக அறிந்துகொண்டு வாழ்விடத்தை அமைத்துக் கொண்டால், நதி வெள்ளம் நம்மை ஒன்றும் செய்யாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது இந்தக் கிராமம். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் மிகப்பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கும் கொள்ளிடம் ஆற்றின் நட்டநடுவே இருக்கிறது முதலைமேடுதிட்டு. ஆற்றின் மேடான தீவுப் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள்,150 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருவதாகப் பெருமையோடு சொல்கிறார்கள்.

மேட்டூருக்கு வரும் உபரிநீர் அனைத்தும் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதால், அரசாங்க கணக்குப்படி ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் ஆற்றில் வந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்க நான் அந்த ஊருக்குச் செல்லும்போது ஆற்றில் வெள்ளம் வருவதற்கான பதட்டமோ, பயமோ அங்கில்லை. சிலர் வாய்க்காலில் தூண்டில்போட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ஊரில் இருக்கும் மளிகைக்கடைக்கு குளிர்பானங்கள் குட்டியானையில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.

ஊரின் மையப்பகுதி
ஊரின் மையப்பகுதி
பள்ளி வளாகத்தில் விளையாடும் சிறுவர்கள்
பள்ளி வளாகத்தில் விளையாடும் சிறுவர்கள்

ஊரின் மையத்திலிருக்கும் கோயிலில் சிறிசுகளும், பெரிசுகளும் அமர்ந்து வழக்கமான கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பெண்மணி தனது பசுமாட்டைக் காலாற நடத்திச் சென்றுகொண்டிருந்தார். தொடக்கப் பள்ளியின் வெளிப்புற கம்பிக்கதவுக்கு பெயின்ட் அடிக்கும் பணியால் நாசியில் வாடை துளைத்தது.

இவர்களின் வசிப்பிடத்தில் வெள்ளநீர் சூழவில்லை. வயல்பகுதிகளை மூழ்கடித்து வெள்ளம் சென்று கொண்டிருந்தது. ஊருக்குச் செல்லும் சாலையில் கணுக்கால் அளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளம் வருவதால் ஊரைவிட்டு வெளியேறுமாறு அரசு அழைத்தும்கூட, யாரும் வெளியே செல்லவில்லை. ’’ஒன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வருவதால் அது பாதிக்காது” என்கிறார் பாலகிருஷ்ணன். ‘’3 லட்சம் கனஅடி வரை வீடுகளை பாதிக்காது. ஆனால், ஆடுமாடுகள் பாதிக்கப்பட்டுவிடும். அதைத்தாண்டி 4 லட்சம் கன அடி தண்ணீர் வந்தால் எங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.

வெள்ள அளவுகோட்டை  காட்டும் பாலகிருஷ்ணன்
வெள்ள அளவுகோட்டை காட்டும் பாலகிருஷ்ணன்

அதனால் 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்தாலே, ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டுபோய் ஆற்றுக்கு வெளியே கட்டிவிடுவோம். தரைத்தளத்தில் இருக்கும் பொருட்களை மேல்தளத்துக்கு கொண்டுபோய் வைத்துவிடுவோம். ஆற்றில் தண்ணீர் எவ்வளவு வருகிறது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். 2005-ல் 4 லட்சம் கன அடி வந்ததையும், அதைத்தொடர்ந்து 6 லட்சம் கன அடி வந்ததையும் மின் கம்பத்தில் பெயின்ட் அடித்து அடையாளம் வைத்துள்ளோம்” என்று சொல்லி, அந்த மின் கம்பத்தையும் காண்பித்தார்.

அரசின் அறிவிப்பைவிட, ஆற்றில் வரும் தண்ணீரின் உண்மையான அளவை தெரிந்துகொள்ள தாங்களாகவே பல்வேறு உபாயங்கள் வைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் தண்ணீர் வந்தால் ஒரு லட்சம் கன அடி, இதற்கு மேலே கோயில் அருகே வந்தால் 2 லட்சம், 4 லட்சம் வந்தால் இதோ இந்தக் கோடு என்று அடையாளம் வைத்துக் கண்டறிந்து அதன்படி செயல்படுகிறார்கள். 2005 வெள்ளத்தில் இந்த ஊர் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஆச்சாள்புரம் பள்ளியில் பல நாட்களுக்கு தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும் சிலர், நீந்திப்போய் ஊர் வெள்ள நிலவரத்தை அவ்வப்போது பார்த்து வந்திருக்கிறார்கள்.

தலைமை ஆசிரியர் ராஜு
தலைமை ஆசிரியர் ராஜு

’’ஆற்றுக்கு நடுவே வெள்ளத்தைச் சமாளித்து வாழும் இந்த வாழ்க்கைக்கு இவர்கள் தங்களை தகவமைத்துக்கொண்டு விட்டார்கள். இப்போது கட்டப்படும் அனைத்து வீடுகளுமே தரை மட்டத்திலிருந்து சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் கட்டப்படுகிறது. அதனால் கொள்ளிடம் ஆறு கரை வழியும் அளவுக்கு வெள்ளம் வந்தாலும் கூட இங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் வராது. அதற்குமேல் கரை வழிந்துபோய்விடும் என்பதால், அதைப்பற்றிய கவலையும் இவர்களுக்கு இல்லை.

ஆடு மாடு வைத்திருப்பவர்கள் அதற்கான வைக்கோலை வீட்டின் மாடியில் கொண்டு வைத்திருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லோருக்கும் நீச்சல் தெரியும். ஊருக்குள் வரும் சாலையில் கழுத்தளவு தண்ணீர் வரும்வரைக்கும் பயப்படாமல் ஊரில்தான் இருப்பார்கள். அதற்குமேல் போனால்தான் ஊரைவிட்டு வெளியே செல்வார்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். அனைவருமே விவசாயம் செய்கிறார்கள். வெள்ளம் வரும்போதெல்லாம் இவர்களது விவசாயம் தான் பாதிக்கப்படுகிறதே தவிர இவர்களின் தைரியத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை” என்கிறார் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜு.

செந்தில்
செந்தில்

’’ஒவ்வொரு முறை வெள்ளம் வரும்போதும் ஓடிவரும் அமைச்சர்களும், ஆட்சியர்களும் அதைச்செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று சொல்கிறார்களே தவிர வெள்ளம் வடிந்தபிறகு எதையும் செய்வதில்லை” என்று அலுத்துக் கொள்கிறார் அவ்வூரைச் சேர்ந்த செந்தில், ‘’ஆற்றின் வடக்குக்கரை பகுதியில் இருக்கும் ஜெயங்கொண்டபட்டிணத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் புயல், வெள்ள பாதுகாப்பு முகாம்கள் 4 அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கரையில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். பக்கத்தில் நாதல்படுகை, சந்தப்படுகை என்று இன்னும் 2 ஊர்கள் இருக்கிறது. இந்த இடங்களில் ஆற்றின் கரையை ஒட்டி தலா ஒரு புயல் பாதுகாப்பு மையம் கட்டித் தாருங்கள் என்று அரசிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை அதைச் செய்துதரவில்லை” என்கிறார் அவர்.

ஐயப்பன்
ஐயப்பன்

அவரைத் தொடர்ந்த அய்யப்பன், ‘’அதனால் ஒவ்வொரு முறையும் இங்கிருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கிற ஆச்சாள்புரம் அரசுப் பள்ளிக்கு அகதிகளாகச் செல்லவேண்டியிருக்கிறது. அப்போது ஊர் என்ன ஆயிற்றோ... பொருள் என்னாயிற்றோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கணும். அதனால்தான், வெள்ளம் வந்தாலும்கூட பெரும்பாலும் ஊரைவிட்டுப் போவதில்லை. இந்த ஆற்றின் கரையிலேயே ஊரின் எல்லையில் புயல் பாதுகாப்பு மையம் அமைத்துக் கொடுத்துவிட்டால் நாங்கள் ஊரைவிட்டுச் செல்லவேண்டிய அவசியம் இருக்காது. இங்கேயே இருந்து கண்காணித்து வருவோம், அரசாங்கம் அதை முதலில் செய்துதர வேண்டும்” என்றார்.

வெள்ளத்தையே சமாளித்து வாழும் இந்த மக்களுக்கு, வெள்ளம் வரும்போது பள்ளிகளுக்கு அழைத்துச்செல்வது, உணவு தருவது, நிவாரணப் பொருட்கள் அளிப்பது என அதையும், இதையும் செய்து தருவதைவிட, புயல், வெள்ள பாதுகாப்புப் புகலிடக் கட்டிடம் கட்டித்தருவதே சாலச்சிறந்தது என்பதை, அரசாங்கம் உணராதது ஏனோ?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in