போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவும் முதியவருக்கு காவலர்கள் செய்த உதவி!

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவும் முதியவருக்கு காவலர்கள் செய்த உதவி!

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நாகர்கோவில் மாநகர சாலைகளை போகுவரத்துப் பிரிவு போலீஸாருடன் இணைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீர் செய்துவருகிறார் விஜயன் என்னும் முதியவர். இந்நிலையில் விஜயனின் சிகிச்சைக்கு போக்குவரத்துக் காவலர்கள் சேர்ந்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலை அடுத்த சித்திரை திருமகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். திருமணம் செய்துகொள்ளாத இவர் தன் சகோதரியின் வீட்டில் வசித்து வருகிறார். நாகர்கோவில் கோட்டாறு சந்திப்பிற்கு தினசரி வந்துவிடும் விஜயன், அங்கு தினமும் காலை முதல் இரவுவரை போக்குவரத்து போலீஸாருடன் சேர்ந்து சாலைப் போக்குவரத்தை சீர் செய்வார். இதற்கு விஜயனுக்கு சம்பளம் எதுவும் கிடையாது. விஜயன் சமூக அக்கறையுடன் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சேவையைச் செய்துவருகிறார்.

பணியில் இருக்கும் போக்குவரத்துப் பிரிவு போலீஸார், டீ, வடை உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுப்பதுதான் விஜயனுக்குக் கிடைக்கும் அதிகபட்ச அனுகூலம். கரோனா பரவலின் போது பொதுமுடக்கம் அமலில் இருந்த போதுகூட விஜயன் தனது ஊரிலிருந்து நடந்தே நாகர்கோவிலுக்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தார்.

அப்படிப்பட்ட விஜயனுக்கு கண் பார்வையில் ஏதோ குறைபாடு. அதை உணர்ந்த நாகர்கோவில் போக்குவரத்து காவலர்கள் சேர்ந்து விஜயனின் கண் சிகிச்சைக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்தனர். நாகர்கோவில் போக்குவரத்துப் பிரிவுக்காவலர் அருண் இந்தத் தொகையை இன்று காலையில் விஜயனிடம் வழங்கினார். எவ்வித பிரதிபலனும் இல்லாமல் சேவை செய்யும் விஜயனுக்கு போக்குவரத்துக் காவலர்கள் செய்த உதவி நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in