டிஎஸ்பி அலுவலகத்தில் செல்போனை ஒப்படைத்தார் விஷ்வ ஹிந்து பரிஷத் முத்துவேல்!

பெற்றோரின் சம்மதத்துடன் வீடியோ எடுத்ததாக பேட்டி
 விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல்
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல் hindu

தஞ்சை மாணவி வழக்கில் அவரை வீடியோ எடுத்த முத்துவேல் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி இன்று வல்லம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜரானார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் பூச்சி மருந்தை உட்கொண்டதால் கடந்த 15ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 19-ம் தேதி மாலை இறந்தார்.

அவர் படித்து வந்த கிறிஸ்தவ பள்ளியில் அவரை மதம் மாற வலியுறுத்தியதால்தான் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவா கட்சிகள் பிரச்சினையைக் கிளப்பின. நீதி கிடைக்கவேண்டும், பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல், ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் என்று பலவித போராட்டங்களும் நடத்தப்பட்டன. மாணவி மதமாற்றத்திற்கு வலியுறுத்தப் பட்டார் என்பதற்கு ஆதாரமாக மாணவியின் வாக்குமூலம் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வெளியில் பரப்பப்பட்டது.

மாணவி தற்கொலை விவகாரம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி மாணவியின் உடலை அவரது பெற்றோர் வாங்கி அடக்கம் செய்தனர். மாணவியின் வாக்குமூலம் அடங்கிய வீடியோவை எடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பிய மதுரை உயர்நீதிமன்றம், அவர் தஞ்சாவூர் வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பதுடன் அவரது செல்போன் உள்ளிட்டவற்றையும் ஒப்படைக்க வேண்டும், அத்துடன் மாணவியின் பெற்றோரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

மாணவியின் பெற்றோர்
மாணவியின் பெற்றோர் hindu

அதையடுத்து இன்று ஜனவரி 25 ம் தேதி மாணவியின் வாக்குமூலத்தை வீடியோ எடுத்த முத்துவேல் வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளராக இருக்கிறார். மாணவியை வீடியோ எடுத்த சூழல் குறித்து அவர் விளக்கமளித்தார். அத்துடன் தனது செல்போனையும் ஒப்படைத்தார். அவருடன் மாணவியின் பெற்றோரும் ஆஜராகினர்.

காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த முத்துவேல் செய்தியாளர்களிடம் பேசும்போது, அவர் மாணவியின் குடும்ப நண்பர் என்றும், மாணவி தற்கொலைக்கு முயன்ற விஷயம் குறித்து கேள்விப்பட்டு அவரை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றதாகவும், அப்போது அவரது பெற்றோரின் வேண்டுகோளின்படியே மாணவியை வீடியோ எடுத்ததாகவும் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தந்தை, உயர்நீதிமன்ற உத்தரவின்படி தாங்கள் ஆஜராகி இருப்பதாகவும், தங்கள் மகள் தற்கொலைக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்ததாகவும் கூறினார். மேலும் கடந்த 25 ஆண்டு காலமாக தான் திமுக உறுப்பினர் என்றும், தன்னை ஒரு ஆறுதலுக்காககூட திமுகவினர் யாரும் வந்து சந்திக்கவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in