சாலையில் கிடந்த ரேஷன், ஆதார் கார்டு, செல்போன்: போலீஸிடம் ஒப்படைத்த யாசகரின் நேர்மை

சாலையில் கிடந்த ரேஷன், ஆதார் கார்டு, செல்போன்: போலீஸிடம் ஒப்படைத்த யாசகரின் நேர்மை
ஆவணங்களை ஒப்படைக்கும் தேவதாஸ் மற்றும் காவல்துறையினர்

கீழே கிடந்து எடுத்த குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த யாசகரையும், அதை உடனடியாக உரியவரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளரையும் பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞானசபையில் தங்கியிருக்கும் யாசகர் தேவதாஸ் என்பவர் நேற்று மாலை கடலூர் முதுநகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் கிடந்த சிறிய பை ஒன்றை எடுத்து திறந்து பார்த்தார். அதில் ஏடிஎம் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும், ஒரு அலைபேசியும் இருந்தது.

எல்லாம் முக்கிய ஆவணங்களாக இருக்கிறதே, இது இல்லாமல் இதற்குரியவர் மிகவும் கஷ்டப்படுவாரே என்று யோசித்த தேவதாஸ் அதை உரியவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். அதனையடுத்து அந்த பையை எடுத்துக்கொண்டு நேராக குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்குப் போனார்.

அங்கு விவரம் சொல்லி ஆவணங்களுடன் அந்தப் பையை ஒப்படைத்தார். அங்கிருந்த உதவி ஆய்வாளர் இளையராஜா, தேவதாஸை பாராட்டி, அங்கேயே அமர வைத்துவிட்டு, அலைபேசி வழியாக ஆவணங்களில் காணப்பட்ட விவரங்களின் அடிப்படையில் உரியவருக்கு தகவல் கொடுத்து காவல் நிலையத்திற்கு வரச் செய்தார்.

வந்த நபர் கூறிய விவரங்களை சரிபார்த்த பின்னர் அவரது ஆவணங்களை தேவதாஸ் மூலமாகவே அவரிடம் ஒப்படைத்தார். உடனடியாக முக்கிய ஆவணங்களை உரிய நபரிடம் ஒப்படைத்த யாசகர் தேவதாஸ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா ஆகியோருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in