
அரசுப்பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவனை மாநகராட்சி மேயர் நேரில் தேடிப்போய் வாழ்த்துச் சொன்ன சுவாரஸ்ய சம்பவம் இன்று நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மையில் எஸ்.பியாக நியமிக்கப்பட்டவர் ஹரி கிரண் பிரசாத். இவர் பதவியேற்றபோதே தன் முதல் சல்யூட்டை தன் பெற்றோருக்கு அடித்து நெகிழ்ச்சியூட்டினார். வழக்கமாக முகாம் இல்லங்களுக்குள் மட்டுமே நடைபயிற்சி செய்யும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு மத்தியில் சாலைகளில் நடைபயிற்சி, மெது ஓட்டம் என மேற்கொண்டு மக்களுக்கு காவல் துறை உயர் அதிகாரிகளின் மேல் இருக்கும் தயக்கத்தையும், அந்நியத்தன்மையையும் உடைத்து வருகிறார். இதேபோல் ஹெல்மெட்டின் அவசியத்தை அவரே ஆங்காங்கே நின்று வாகன ஓட்டிகளுக்கும் வலியுறுத்தி வருகிறார்.
இதற்கெல்லாம் மேலாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் தனது மகன் நிஸ்ரிக்கை நாகர்கோவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பும் சேர்ந்திருந்தார். இதற்கு அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளும் வந்த வண்ணம் உள்ளது. பெருங்கவிஞரும், திருத்தமிழர் போராட்டக் காலத்தில் உயிர்ப்பான பல கவிகளைத் தந்தவருமான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பயின்ற, பயிற்றுவித்த பெருமையும் இந்த பள்ளிக்கு உண்டு. மாநகர எல்லைக்குள் வரும் இப்பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்பட பள்ளியின் தேவைகள் குறித்து ஆராய நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று இந்த பள்ளிக்குச் சென்றார்.
அப்போது ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மகன் நிஸ்ரிக்கை சந்தித்து வாழ்த்துச் சொன்னார். மாநகராட்சி மேயர், ஒன்றாம் வகுப்பு மாணவனை தேடி வந்து வாழ்த்துச் சொன்ன ருசிகர சம்பவமும் இதனால் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2015 காலக்கட்டத்தில் ஆட்சியராக இருந்த நாகராஜனின் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்தது. அதன் பின்னர் வந்த உயர் அதிகாரிகளில் அரசு சார்ந்த கல்வி, மருத்துவமனைகளை பயன்படுத்தியிருப்பது இப்போதைய எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.