உதவி ஆய்வாளரை மிரட்டிய நபர் எஸ்கேப்: வலைவீசும் போலீஸ்

செந்தில்
செந்தில்

``அரை மணி நேரத்தில் ஆளையே தீர்த்துக்கட்டி விடுவேன்'' என்று காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை அலைபேசியில் மிரட்டியவர், தற்போது போலீஸாரின் தேடுதல் வேட்டைக்கு அஞ்சி கண்காணாத இடத்துக்கு ஓடி ஒளிந்திருக்கிறார்.

கொள்ளிடம் அருகே தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் மணிமாறன் ( 31) சீர்காழி காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். தான் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது செங்கமேடு அருகில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தன்னை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தார்.

சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் அர்ஜூனன், இதுகுறித்து விசாரணை செய்வதற்காக கொள்ளிடம் தைக்கால் பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்கின்ற செந்தில் என்பவரை அலைபேசியில் நேற்று அழைத்துள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய செந்தில், உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசியதுடன் மிகக்கடுமையாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.

அர்ஜுனன்
அர்ஜுனன்

மேலும், ``தன்னை இனிமேல் விசாரித்தால் அரை மணி நேரத்தில் குடும்பத்தோடு காலி செய்து விடுவேன்'' என கடுமையாக பேசி மிரட்டி உள்ளார். இதனையடுத்து செந்தில் மீது அர்ஜுனன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் லாமெக் உத்தரவின் பேரில் சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன், உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் போலீஸார் செந்தில் மீது காமக் குரோதமாக ஆபாச வார்த்தையில் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து செந்திலை தேடி வருகின்றனர்.

போலீஸாரின் இந்த தீவிர தேடலுக்கு பயந்து செந்தில் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. சிறப்பு உதவி ஆய்வாளர் அர்ஜுனனை, செந்தில் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுக்கும் குரல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in