சிறுத்தைப்புலி சிக்கியது; கோவை மக்கள் நிம்மதி

டாப் சிலிப் வனப்பகுதியில் விடப்படுகிறது
சிக்கிய சிறுத்தைப்புலி
சிக்கிய சிறுத்தைப்புலிtwitter

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே தனியார் குடோன் வளாகத்தில் பதுங்கியபடி 5 நாட்களாக வனத் துறையினருக்கு போக்குக்காட்டி வந்த சிறுத்தைப்புலி, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கூண்டில் சிக்கியுள்ளது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

குனியமுத்தூரை அடுத்த பி.கே.புதூரில், கடந்த 2 வாரங்களாக குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைப்புலி சுற்றிவருவது தெரியவந்தது. அந்தச் சிறுத்தைப்புலி தெருநாய்களை வேட்டையாடி, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. அதைக் கூண்டு வைத்துப்பிடிக்க வனத் துறையினர் முயன்ற போது, கடந்த 17-ம் தேதி பி.கே.புதூரில் உள்ள தனியார் குடோன் வளாகத்தில் புகுந்த சிறுத்தைப்புலி அங்கேயே பதுங்கியது. அது தப்பித்துச் செல்லாமல் இருக்க, மொத்த குடோனையும் கோவை வனத் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். குடோனைச் சுற்றிலும் வலைகளை கட்டினர். குடோன் வாசல்களில் 2 இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட்டன. அவற்றில் உயிருள்ள நாய் மற்றும் இறைச்சி வைக்கப்பட்டன என்றாலும் அவற்றைச் சாப்பிட சிறுத்தைப்புலி வரவில்லை.

கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தைப்புலி
கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தைப்புலிtwitter

ஒருமுறை கூண்டுக்குள் சென்று நூலிழையில் தப்பித்த சிறுத்தைப்புலியைப் பிடிக்க, 3 கூண்டுகளில் உயிருள்ள சேவல், கோழிகள் கட்டப்பட்டன. அத்துடன் நவீன கேமராக்களும் பொருத்தப்பட்டன. 5 நாட்கள் போக்குகாட்டிய சிறுத்தைப்புலி, கடைசியாக நேற்று இரவு கூண்டுக்குள் நுழைந்தபோது சிக்கிக் கொண்டது. 5 நாட்களாக அந்தச் சிறுத்தைப்புலிக்கு போதிய உணவு தண்ணீர் இல்லாததால் சோர்வாகக் காணப்பட்டதாகவும், அதனாலேயே கூண்டுக்குள் அமைதியாக இருந்ததாகவும் வனத் துறையினர் கூறினர்.

பிடிப்பட்ட சிறுத்தைப்புலியைப் பொள்ளாச்சி டாப் சிலிப் வனப்பகுதியில் விட வனத் துறையினர் கொண்டு சென்றுள்ளனர். சிறுத்தைப்புலி பிடிபட்டதால் குனியமுத்தூர், பி.கே.புதூர், மதுக்கரை பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இரவு பகல் பாராமல் கண்காணித்துச் சிறுத்தைப்புலியை வனத் துறையினர் பிடித்துள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in