தன்னுடைய கண்முன்னே கழிவுநீர் கால்வாயில் விழுந்த குழந்தையை கால்வாயில் விழுந்து காப்பாற்றியுள்ளார் தந்தை. இந்த சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சி பகுதிக்குட்பட்ட 6-வது வார்டில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், கால்வாய்கள் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே விடப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, எல்லுப்பாறை பகுதியை சேர்ந்த விவேக் என்பவர் தனது 3 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளார். கால்வாய் அருகில் வாகனத்தை நிறுத்திய விவேக், தனது மகளை கீழே இறக்கிவிட்டுள்ளார்.
அப்போது, அருகில் இருந்த கழிவுநீர் கால்வாயில் குழந்தை தடுமாறி விழுந்தது. சற்றும் தாமதிக்காத விவேக், மகளை கைகளால் பிடிக்க முயன்றபோது முடியவில்லை. இதனால், அந்த கழிவுநீர் கால்வாய்க்குள் நொடிப்பொழுதில் விழுந்து மகளை மேலே தூக்கி காப்பாற்றினார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் குழந்தை தாயிடம் ஒப்படைத்தனர். பின்னர் குழந்தையை மருத்துவமனையில் விவேக் அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயை நகராட்சி ஊழியர்கள் உடனடியாக மூடினர். தந்தையின் செயலால் குழந்தை உயிர் பிழைத்ததால் அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.