ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்ட ஆட்சியர்!

குமரி வனத்துறையின் நன்முயற்சி
ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்ட ஆட்சியர்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் வனத்துறையின் முயற்சியால் சேகரிப்பட்ட ஆமை முட்டைகள் தொடர்ந்து குஞ்சு பொறித்து வருகின்றன. அதில் இன்று மட்டும் 125 ஆமைக் குஞ்சுகளை குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கடலில் விட்டார்.

ஆலிவ்ரிட்லி எனப்படும் சிற்றாமை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் அழிக்கால் வரையுள்ள கடற்கரை கிராமங்களில் இனப்பெருக்க காலம் முடிந்ததும் வந்து முட்டையிட்டு செல்கின்றது. குமரி மாவட்டத்தில் 30 கடற்கரை கிராமங்கள் ஆமை முட்டையிடுவதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டையிடும் ஆமைகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு, வனத்துறை வைத்துள்ள ஆமை முட்டை பொறிப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். முட்டைகள் 45 நாள் முதல் 65 நாள்களுக்குள் பொறித்து விடும். அவை அதன் பின்பு மீண்டும் கடலில் சென்று விடப்படும்.

குமரி மாவட்டத்தில் கோவளம் கடற்கரைக் கிராமத்தில் ஆமை முட்டைகள் பொரிப்பகம் உள்ளன. இங்கு கடற்கரை மணலில் ஆமைகள் இடும் முட்டைகள் சேகரிக்கப்பட்டு, முட்டைகள் பொரிக்க தேதிவாரியாக மணல் குழிகள் அமைக்கப்பட்டு முட்டை பொரிப்புக்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும். நடப்பாண்டில் இதுவரை குமரி கடலோர கிராமங்களில் இருந்து 5,993 ஆமை முட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏற்கெனவே 1,317 ஆமை குஞ்சுகள் பொரித்து பத்திரமாகக் கடலில் விடப்பட்டன.

இந்நிலையில் இன்று கடலில் விட தயாரான 125 ஆமை குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆகியோர் கடலில் விட்டனர். இந்த 125 ஆமை குஞ்சுகளும், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஆமை முட்டைகளாக சேகரித்து வைக்கப்பட்டதாகும். ஏப்ரல் மாதம் வரை ஆமைகளுக்கு இனப்பெருக்கக் காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.