‘நீட்’டை ரத்து செய்யக்கோரி ஆண்டாள் கோயில் கோபுரத்தில் ஏறிப் போராடிய மாணவர்கள் மீதான வழக்கு ரத்து

உயர் நீதிமன்ற கிளை
உயர் நீதிமன்ற கிளை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்கை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் 2017-ல் நீட் தேர்வுக்கு எதிராக அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தமிழகம் முழுதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்பு 8.9.2017-ல் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். அதில் சில மாணவர்கள் கோயில் கோபுரம் மீது ஏறி கோஷம் எழுப்பினர்.

இது தொடர்பாக குருராஜ் உட்பட பலர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி குருராஜ் உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இதை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

“நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மாணவி அனிதா தற்கொலையால் எழுந்த உணர்ச்சிப்பெருக்கால் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கு 2017-ல் பதிவுசெய்த போதிலும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், போராட்டத்தின்போது மாணவர்கள் எவ்வித வன்முறையிலும் ஈடுபடவில்லை. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் பொருந்தும்”.

இவ்வாறு நீதிபதி அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in