குமரியில் புதுப்பிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மனின் கட்டிடம்!

குமரியில் புதுப்பிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மனின் கட்டிடம்!
புதுப்பிக்கப்பட்ட கட்டிடம்

கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சி பகுதியில் இருக்கும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடம் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி இருந்தது. பாம்பு உள்ளிட்ட விஷ ஐந்துக்களின் புகலிடமாகவும் மாறிய இந்த கட்டிடம், மதுப்பிரியர்களின் மகிழ்விடமாகவும் இருந்துவந்தது. இந்நிலையில், பாரம்பரியப் பெருமைமிக்க இந்தக் கட்டிடத்தை நீண்ட காலத்துக்குப் பின்பு பொதுப்பணித்துறை சுமார் 85 லட்சம் ரூபாய் செலவில் பழமை மாறாமல் புதுப்பித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் உள்ளது புலியூர்குறிச்சி. இங்கு வரலாற்று பெருமைகொண்ட உதயகிரி கோட்டை உள்ளது. 81 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இக்கோட்டையைச் சுற்றி 16 அடி உயர கருங்கல் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதன் உள்ளே பல்லுயிர் பூங்காவும் அமைந்துள்ளது. மான், மயில் உள்ளிட்ட உயிரினங்களுக்காக தனித்தனியே பூங்கா வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோக இங்கு டச்சுப்படை தளபதியாக இருந்தவரும், குளச்சல் போரில் திருவிதாங்கூர் படையிடம் சரணடைந்து, திருவிதாங்கூர் படைக்குப் போர் பயிற்சி அளித்தவருமான டிலனாயின் கல்லறையும் உள்ளது.

உதயகிரிகோட்டை குமரி மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாதளங்களில் ஒன்றாகும். சுற்றுலா பயணிகளின் விருப்பமான இந்த உதயகிரி கோட்டையின் மிக அருகிலேயே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது.

கட்டிடத்தின் பழைய தோற்றம்
கட்டிடத்தின் பழைய தோற்றம்

இந்தக் கட்டிடத்தின் பின்னணியே சுவாரஸ்யமானது. வரலாற்று சிறப்புமிக்க குளச்சல் போரில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மனிடம் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தளபதி டிலனாய் சரண் அடைந்தார். இந்த டிலனாய் பிற்பாடு திருவிதாங்கூர் வீரர்களுக்குப் போர் பயிற்சிக் கொடுத்தார். அவர் தங்குவதற்கு வசதியாக 1900 -ம் ஆண்டில் மார்த்தாண்ட வர்மனால் 4 ஆயிரம் சதுர அடியில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது.

டிலனாய் மேற்பார்வையில் உதயகிரி கோட்டையில் வைத்து திருவிதாங்கூர் படை வீரர்களுக்கு ஆயுதம் தயாரிப்பு, மற்றும் போர் பயிற்சி அளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த புராதனக் கட்டிடம் மிகவும் பாழடைந்த நிலையில் இருந்தது. இதை சீர் செய்ய வேண்டும் என தொடர்ந்து வரலாற்று ஆர்வலர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தான், ரூ.85.1 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையினர் இப்போது இந்தக் கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in