கண்ணீருடன் நின்றுகொண்டிருந்த மணமகளின் பெற்றோர்: நகையுடன் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்!

கண்ணீருடன் நின்றுகொண்டிருந்த மணமகளின் பெற்றோர்: நகையுடன் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்!

திருமணத்தை கோயிலில் முடித்துவிட்டு ஏனைய நிகழ்ச்சிகளுக்காக திருமண மண்டபத்திற்கு சென்று கொண்டிருந்த மணப் பெண்ணின் பெற்றோர் ஆட்டோவில் தவறவிட்ட நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

விருதுநகர் பெரிய வள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி - முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களது மகளுக்கு விருதுநகர் ராமர் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. ஏனைய நிகழ்ச்சிகள் விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றன.

இந்நிலையில், மணப் பெண்ணின் பெற்றோர் திருமணம் நடைபெற்ற ராமர் கோயிலில் இருந்து மண்டபத்திற்கு செல்ல ஆட்டோவில் பயணித்தனர். ஆட்டோ ஓட்டுநர் ராமர், இருவரையும் திருமண மண்டபத்தில் இறக்கி விட்டுவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

சுமார் 1 மணி நேரம் கழித்து மீண்டும் மற்றொரு சவாரிக்காக வீட்டில் இருந்து புறப்பட்ட போது ஆட்டோவின் பின் சீட்டில் பேக் ஒன்று இருப்பதை கண்டுள்ளார். அதனை திறந்து பார்த்த போது நகைகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவருக்கு காலையில் திருமண மண்டபத்தில் சவாரி இறக்கி விட்டது நினைவுக்கு வரவே, நகைகள் அவர்களுடையதாக இருக்கும் என்று எண்ணி, பேக்கை எடுத்துக்கொண்டு உடனடியாக மண்டபத்திற்கு விரைந்துள்ளார்.

இதற்கிடையே, பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் மண்டபத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயம், நகையை தவற விட்ட கவலையில், பெண்ணின் பெற்றோர் மண்டபத்தில் நின்றிருந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ராமர், நகைகள் இருந்த பேக்கை வழங்கினார். அங்கு விசாரணைக்காக வந்திருந்த கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் முன்னிலையில் நகைகள் சரிபார்க்கப்பட்டு அதிலிருந்த 25 சவரன் நகைகள் பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை காவல்துறையினர் மற்றும் திருமண வீட்டார் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in