திருப்பூர் மக்களின் உயிர்பெறும் 50 ஆண்டுகாலக் கனவு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்று திறப்பு
முன்னாள் எம்எல்ஏ சு.துரைசாமி
முன்னாள் எம்எல்ஏ சு.துரைசாமி

திருப்பூர், தாராபுரம் சாலையில் ரூ.350 கோடி மதிப்பில், 12 ஏக்கரில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, இன்று மாலை திறக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் இந்நிகழ்வில் பங்கேற்கிறார். இதில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியும் ஒன்று.

சுமார் 25 லட்சம் மக்கள் வாழும் திருப்பூர் மாவட்டத்தில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்பது, 50 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக இருந்தது. திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், காய்ச்சல், அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் பல்வேறு பொது சிகிச்சைகளுக்காக சுமார் 2,000 நோயாளிகள் நாள்தோறும் வந்துசெல்கின்றனர்.

இன்று திறப்பு விழா காணும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
இன்று திறப்பு விழா காணும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், ஜல்லிப்பட்டி, மடத்துக்குளம் மற்றும் கரடிவாவி ஆகிய அரசு அரசு மருத்துவமனைகளின் தலைமை மருத்துவமனையாக. திருப்பூர் அரசு தலைமை மருத்துவ மருத்துவமனை உள்ளது.

இன்று திறக்கப்படும் இந்த மருத்துவக் கல்லூரியில் உடற்கூறாய்வு, உயிர் வேதியியல் மற்றும் உடல் இயக்கியல் உட்பட 25 துறைகள்உள்ளன. இதில், அனைத்து துறைகளுக்கும் ஆட்கள் நிரப்பும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

“அரசு மருத்துவமனையை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து உயர்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புகிறோம். இனி இந்த நிலை மாறும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாறும்போது, திருப்பூரிலேயே தரமான சிகிச்சை கிடைக்கும். திருப்பூர் போன்ற ஜவுளித் துறை தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டத்தில், பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் அந்தந்தத் துறையில் நமக்கு கிடைப்பார்கள்” என்கின்றனர் இங்குள்ள மருத்துவர்கள்.

தலைமை மருத்துவமனை உருவான வரலாறு

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை உருவாக, முக்கிய காரணகர்த்தாகவாக இருந்தவர் அப்போதைய திருப்பூர் திமுக எம்எல்ஏ சு.துரைசாமி. இவர் இன்றைக்கு மதிமுகவின் மாநில அவைத்தலைவராக உள்ளார். திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை இன்றுள்ள இடம், ஒரு காலத்தில் திருப்பூர் நகராட்சி குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்தி வந்தது. அந்த இடத்தை நகராட்சியிடம் இருந்து வாங்கி, 50 ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவமனை உருவாகக் காரணமாக இருந்தவர் சு.துரைசாமி.

இதுகுறித்து, சு.துரைசாமி கூறியதாவது: “1967, 1971 என தொடர்ச்சியாக 2 முறை திருப்பூர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பொது மருத்துவத் துறை இயக்குநர் மரைக்காயரை அன்றைக்கு அழைத்துவந்து, திருப்பூரில் மருத்துவமனை தொடங்கும் எண்ணத்தைச் சொன்னோம். இன்றைய மருத்துவமனை அமைந்துள்ள இடத்தை, நகரின் பிற்கால வளர்ச்சிக்குப் பயன்படும் என, இந்த இடத்தை மரைக்காயர் தேர்வுசெய்தார். அப்போதைய நகராட்சி ஆணையர் சீனிவாசனுக்கு, எம்எல்ஏ என்ற முறையில் நான் கடிதம் கொடுத்தேன். அப்படித்தான் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு இடம் கிடைத்தது.

ஊரைத் தாண்டி மருத்துவமனை கட்டுவதாக, அப்போது பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அன்றைக்கு, சிக்கண்ணா செட்டியார் அறக்கட்டளையின் எம்.என்.முருகப்பசெட்டியார் ரூ. 2 லட்சம், அரிமா சங்கம் ரூ. 50,000, டிடிபி மில் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் ரூ.50,000 மற்றும் பலர் நிலம் வாங்கப் பணம் கொடுத்தனர்.

யார் மருத்துவமனை வரக் காரணமாக இருந்தார்கள் என்பதை விவரிக்கும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் பெயர்ப்பதாகையும் இருந்தது. அது தற்போது எங்கே சென்றது என்று தெரியவில்லை. 05.07.1976 அன்று தமிழக ஆளுநர் மோகன்லால் சுகாதியா, கோவை ஆட்சியர் நரசிம்மன் ஆகியோர் திருப்பூரில் அரசு மருத்துவமனையை தொடங்கிவைத்தனர்.

மருத்துவமனை கட்டிடக்குழுத் தலைவராக நரசிம்மன் ஐஏஎஸ், துணைத் தலைவராக கோட்டாட்சியர் அ.இளங்கோவன், மாவட்ட மருத்துவ அலுவலர் எஸ்.அண்ணாமலை, என். குமாரசாமி முதலியார், சி. ராமசாமி செட்டியார், எல்.ஜி.பாலகிருஷ்ணன், செயலாளர் சு.துரைசாமி, துணைச் செயலாளர்கள் ஜெத்துபாய் கோவிந்த்ஜி, ரத்தினசாமி கவுண்டர், எம்.கே.ராமநாதன், பொருளாளர் பழனிசாமி செட்டியார் ஆகியோரின் பெருமுயற்சியால் இந்த மருத்துவமனை அன்றைக்கு உருப்பெற்றது. நாங்கள்அன்றைக்கு கண்ட கனவு இன்றைக்கு நனவாகிவிட்டது” என்றார்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை உருவாகக் காரணமாக இருந்தவர்கள் மற்றும் முயற்சி எடுத்தவர்களை, இன்று நடைபெறும் நிகழ்வில் அழைத்து கவுரவிக்க வேண்டும் என்பது ஊரின் மூத்த குடிமக்களின் எண்ணமாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in