ஜவுளிக்கடை உரிமையாளர் கொலை: தேர்தல் பிரச்சினையா?

ஜவுளிக்கடை உரிமையாளர் கொலை: தேர்தல் பிரச்சினையா?

சிவகங்கை, காந்தி வீதியைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் மணிவண்ணன்(26), ஜவுளிக்கடை உரிமையாளர். கடந்த தீபாவளி பண்டிகையின்போது இவருக்கும், புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையே பட்டாசுக் கடையில் வைத்து தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறு தொடர் மோதலாக உருவெடுத்தது. கோஷ்டி மோதலாக மாறியதால், கிராம மக்கள் தலையிட்டு இருதரப்பினருக்கும் இடையே சமரசம் செய்துவைத்தனர்.

மணிவண்ணனின் அண்ணன் இளங்கோ, சிவகங்கை மேலூர் சாலையில் நேற்று புதிதாக உணவகம் ஒன்றைத் திறந்தார். முதல் நாள் வியாபாரம் முடிந்ததும் இளங்கோ, தன் தம்பி மணிவண்ணனுடன் கடையிலேயே சாப்பிட அமர்ந்தார். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், மணிவண்ணன் யார் என்று கேட்டு, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. தடுக்க முயன்ற இளங்கோவையும் வெட்டிவிட்டு அந்தக் கும்பல் தப்பியது.

கடை ஊழியர்கள் அண்ணன் தம்பி இருவரையும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே மணிவண்ணன் இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து சிவகங்கை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இறந்த மணிவண்ணனின் மைத்துனர் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதால், அதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

கடை திறப்பு விழாவுக்குக் கட்டப்பட்ட வாழை மரம் சாயும் முன்பே, அதன் உரிமையாளரின் தம்பி வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Related Stories

No stories found.