உப்புக்கஞ்சி காய்ச்சி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

உப்புக்கஞ்சி காய்ச்சி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
பொதுமக்களுக்கு உப்புக்கஞ்சி விநியோகித்த தமிழ் தேசியவாதிகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு உப்புக்கஞ்சி காய்ச்சி தேங்காய் சிரட்டையில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் வழங்கினார்கள்.

இலங்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்ற போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த தமிழர்கள் மீது மிகப்பெரிய இனப்படுகொலையினை ராணுவம் நடத்தியது. இதில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த இனப்படுகொலையைத் தொடர்ந்து, அப்பகுதியில் எஞ்சியிருந்த தமிழர்கள் உப்புக் கஞ்சியைக் காய்ச்சி உண்டு உயிர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இனப்படுகொலையினை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே18-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதனை நினைவு கூறும் வகையில் மதுரை, மேலூர் அருகே கருங்காலக்குடியில், தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, கருங்காலக்குடி தபால் நிலையம் அருகில் உப்புக்கஞ்சி காய்ச்சி தேங்காய் சிரட்டையில் ஊற்றி பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கருங்காலக்குடி கடைவீதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் மே 18 இலங்கை இனப்படுகொலையை விளக்கிக் கூறும் துண்டு பிரசுரங்களையும் அவர்கள் விநியோகித்தனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், "ஆண்டுதோறும் மே 18 அன்று கஞ்சி வழங்கி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் பிள்ளைகளுக்கும் நினைவு கூறுவோம். மேலும், நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரில் உலக நாடுகள் அனைத்தும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். ஆனால், அன்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றபோது உலக நாடுகள் யாரும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். இலங்கை தமிழர்களுக்கு உலக நாடுகள் நீதி வழங்கும் வரை, தங்கள் இயக்கம் உறுதியோடு நின்று போராடும்'' என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in