பள்ளியைத் திறந்துவிட்டு பயிற்சிக்கும் அழைப்பு!

அல்லல்படும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் இன்றுமுதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் சூழலில் பயிற்சி வகுப்புக்கும் ஆசிரியர்கள் நாளை அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒரு ஆசிரியர், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கும் பள்ளிக்கூடங்கள் முடங்கிப் போகும் சூழல் எழுந்துள்ளது.

கணினி பயிற்சி பெறும் ஆசிரியர்கள்
கணினி பயிற்சி பெறும் ஆசிரியர்கள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ரெங்கநாதன் இதுகுறித்துக் கூறும்போது, “மாணவச் செல்வங்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி பயன்பாடு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கற்பித்தல் பணி நடைபெற வேண்டும் என ஆசிரியர்கள் முன்னேற்பாடோடு தயாராகி உள்ளோம்.

இந்நிலையில் ஊரடங்கு விடுமுறை நாட்களில் வழங்கப்பட்ட ‘கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சி’ தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு கொடுத்த அதே பயிற்சியை மீண்டும் வழங்குகிறார்கள். தற்போது பயிற்சி அளிக்கப்பட்டுவந்த பள்ளிகளும் திறக்கப்பட்டு, மாணவர்கள் வரவுள்ள நிலையில் எங்குவைத்து பயிற்சி அளிக்கப் போகிறார்கள்?

பயிற்சி பெறும் ஆசிரியர்கள் ஏதவாது ஒரு அறையில் இருந்து கொண்டு, தங்கள் செல்போன் மூலம் பயிற்சி பெறலாம் என்று பதில் வருகிறது. ஏதோ ஒரு அறையில் அமர்ந்துகொண்டு அவர்களது செல்போன் மூலம் அவர்களாக பயிற்சி பெறலாம் என்று கூறுவதை விந்தை என்பதா வேதனை என்பதா?

எல்லோரும் பல்லக்கில் ஏறினால் பல்லக்கு தூக்குவது யார்? ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்றால் பாடம் நடத்துவது யார்? உயரதிகாரிகளோ திட்டமிட்டவாறு பயிற்சி நடக்கட்டும். பயிற்சிக்கு போவோர் தவிர மீதமிருக்கிற ஆசிரியர்கள் பள்ளிகளில் கற்பித்தல் பணி மேற்கொள்ளட்டும் என்று கூறுகிறார்கள்.

மாணவர்களை அருகருகே அமர வைக்ககூடாது. இடைவெளி இருக்க வேண்டும். ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்ட நிலையில், 60 மாணவர்கள் வரை உள்ள ஈராசிரியர் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் பயிற்சிக்கு சென்றால், மறு ஆசிரியர் ஒருவரே 3 வகுப்பறைகளை கண்காணிக்க முடியுமா? கற்பித்தல் பணி மேற்கொள்ள முடியுமா?

பள்ளியைப் பற்றியும் கவலை இல்லை. பயிற்சியைப் பற்றியும் கவலை இல்லை. ஆசிரியர்களை ஏற்றியும், இறக்கியும் வேலை வாங்க வேண்டும். இளகின இரும்பைக் கண்டால் தொழிலாளி ஓங்கி அடிப்பான் என்பது போல் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு இளப்பமாக போய்விட்டது.

மாணவர் நலனையும், கல்வி நலனையும், நோய் தொற்று காலத்தையும் கருத்தில் கொண்டு பணிகளை திட்டமிட வேண்டும். சரியான திட்டமிடலே உரிய பலனைத் தரும். எவ்வளவு அடித்தாலும் ஆசிரியர்கள் தாங்குவார்கள் என்ற நிலை மாற வேண்டும்’’ என்றார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, இதில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in