சாப்பிட்ட சில நிமிடங்களில் மாணவர்கள் மயக்கம்: வினையான ஃபாஸ்ட் ஃபுட் கடையின் சிக்கன் ஷவர்மா

சிகிச்சை பெறும் மாணவர்
சிகிச்சை பெறும் மாணவர்

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவது தொடங்கியிருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன் (22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

கல்லூரி விடுமுறையையடுத்து சொந்த ஊர் சென்றிருந்த இவர்கள் மூவரும் விடுமுறை முடிந்து, நேற்று மீண்டும் கல்லூரிக்கு திரும்பி வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததால் வெளியில் உணவகத்தில் சாப்பிடலாம் என்று வெளியில் வந்தனர். நேற்று இரவு மூன்று பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பினர்.

அங்கு சக மாணவர்களுடன் அமர்ந்து தாங்கள் ஷவர்மா சாப்பிட்டதைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பிரவீன் வாந்தி எடுத்தார். அதற்குப் பிறகு சில நிமிடங்களில் மற்ற 2 பேரும் வாந்தி எடுத்தனர். ஒரு சில நிமிடங்களில் மூவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அங்கிருந்த சக மாணவர்கள் செய்வதறியாது பதற்றம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து 3 மாணவர்களும் அவசர ஊர்திகள் மூலம் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இரவு முழுவதும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல் ஒவ்வாமை பாதிப்பு அதிகமானதால் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷவர்மா சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருப்பது கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in