வளைவில் திரும்பிய பேருந்து... கம்பியில் சிக்கிய புத்தகப் பை: பறிபோன கல்லூரி மாணவனின் உயிர்

மாணவர் சதீஷ்குமாரின் உடலுடன் மறியல்
மாணவர் சதீஷ்குமாரின் உடலுடன் மறியல்

படியில் பயணம், நொடியில் மரணம் எனும் பேருந்துகளின் வாசகத்துக்கு இன்னும் ஒரு உதாரணமாக ஆகியிருக்கிறார் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அரசு கல்லூரி மாணவர் சதீஷ்குமார்.

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த தேவமங்கலங்கத்தை சேர்ந்த குணசேகரன் - லட்சுமி தம்பதியின் மகன் சதீஷ்குமார்( 20) கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாமாண்டு படித்து வந்தார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், அந்த குடும்பத்தின் மூத்த மகன். அவரைத் தவிர இரண்டு மகன்களும் ஒரு மகளும் அந்த குடும்பத்தில் இருக்கின்றனர்.

மூத்தவராக தனது கடமையை உணர்ந்து படித்து வந்த சதீஷ்குமார் ஊரிலிருந்து தினமும் பேருந்து மூலம் கல்லூரிக்கு வந்து படித்துவிட்டு ஊர் திரும்புகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் ஊருக்குச் செல்வதற்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து தேவமங்கலத்துக்கு அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.

அலுவலகம், கல்லூரி, பள்ளி ஆகியவை முடிந்து ஊர் திரும்பும் நேரம் என்பதால் அந்த பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்தது. உள்ளே செல்ல முடியவில்லை. அதனால் சதீஷ்குமார் பேருந்தின் படிக்கட்டிலேயே நின்று கொண்டு பயணம் செய்தார். புத்தகங்கள் அடங்கிய பை அவரது தோளில் மாட்டியிருந்தது. அது முதுகு பக்கம் கிடந்தது.

கூட்டம் அதிகம் என்பதால் படிக்கட்டு பக்கம் சாய்ந்தவாறு அந்த பேருந்து அசைந்தாடி மெல்ல சென்று கொண்டிருந்தது. கும்பகோணம் 60 அடி சாலை திருப்பத்தில் சென்றபோது, படியில் பணம் செய்த சதீஷ்குமாரின் தோளில் அணிந்து இருந்த பை சாலையின் ஓரத்தில் இருந்த கம்பியில் சிக்கியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதைப் பார்த்த பயணிகள் அலறினர். பேருந்து நின்றது.

உடன் பயணித்தவர்கள் ஓடோடி வந்து பார்த்தனர். பேச்சு மூச்சில்லாமல் பலத்த காயம் அடைந்து கிடந்த சதீஷ்குமாரை பேருந்தில் பயணம் செய்த மற்றவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கீழே விழுந்த வேகத்தில் மூர்ச்சையாகி விட்ட சதீஷ்குமாரின் உடலில் எந்த அசைவும் இல்லை. மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சதீஷ்குமார் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு வெளியே சதீஷ் குமாரின் உடலை வைத்து மறியல் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். அங்கு வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் அசோகன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

படிக்க வந்த மாணவன் சடலமாக ஊர் திரும்பியதைக் கண்டு அந்தப் பெற்றோரை மட்டுமல்லாமல், தேவமங்கலம் கிராமத்தின் அத்தனைக் குடும்பங்களும் சோகத்தில் ஆழ்ந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in