மாறவில்லை மனநிலை; மதிப்பெண் குறைந்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்ட மாணவி

மாறவில்லை மனநிலை; மதிப்பெண்  குறைந்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்ட மாணவி

மதிப்பெண்தான் வாழ்க்கை என்று கருதும் மாணவர்களின் மனநிலை சற்றும் மாறவில்லை என்பதற்கு உதாரணமாய் அமைந்திருக்கிறது திருச்சியைச் சேர்ந்த ஒரு மாணவியின் செயல். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த அந்த மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

திருவெறும்பூர் அருகேயுள்ள பழங்கனாங்குடியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகள் இந்துமதி (16) பூலாங்குடி காலனியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதியிருந்தார். தான் தேர்வு சிறப்பாக எழுதியிருப்பதாகவும், அதனால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்றும் பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் சொல்லியிருந்தார்.

நேற்று பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் இந்துமதி எதிர்பார்த்த மதிப்பெண்ணை விட மிகவும் குறைவாகவே மதிப்பெண் கிடைத்ததாம். இதனால் ஏமாற்றமடைந்த இந்துமதி மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், நேற்று மாலை இந்துமதி திடீரென வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனே அவரது வீட்டில் உள்ளவர்கள் இந்துமதியைக் காப்பாற்றி துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு இந்துமதியை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து துவாக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும் மதிப்பெண் குறைவு என்பதால் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in