`மாட்டு வண்டிக்கும் மணல் கொடுங்க'- போராடி சாதித்த தொழிலாளர்கள்

ஆற்றின் நடுவே அரை நிர்வாணப் போராட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள்
ஆற்றின் நடுவே அரை நிர்வாணப் போராட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள்

மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று ஆற்றின் நடுவில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்கள் கோரிக்கையை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் மாட்டுவண்டி தொழிலாளர்கள்.

மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்
மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்

வேலூர்மாவட்டம், வேலூர் அரும்பருதி அருகே பாலாற்றில் சுமார் 5 ஹெக்டேர் பரப்பளவில் சுற்றுச்சூழல் அனுமதியுடன் மணல் குவாரி இன்று முதல் தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. பாலாற்றில் மணலை எடுத்து அருகிலுள்ள இடத்தில் சேமித்துவைத்து, அங்கிருந்து பொதுப்பணித்துறை சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு யூனிட் மணல் ரூ.3200க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிராக்டர்களும் பொக்லைன் இயந்திரங்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் மூலம் மணல் அள்ளத் துவங்கிய நிலையில் மாட்டுவண்டிகளில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் லாரிகளில் மட்டும் மணல் அள்ள அனுமதிக்கப்படுவதைக் கண்டித்தும், மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கக் கோரியும் பாலாற்றின் மையப்பகுதியில் கூடினர். ஆற்றின் நடுவே அமர்ந்து அவர்கள் அரை நிர்வாண போராட்டத்தை துவங்கினர்.

ஆற்றின் நடுவே குவிந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள்
ஆற்றின் நடுவே குவிந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள்

பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் லெனின் பிரான்ஸிஸ் தலைமையில் அங்கு வந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டித்தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு செய்வதாக ஒப்புக் கொண்டனர். அதனையடுத்து தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, அதன் மூலம் தங்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்ட நிம்மதியோடு மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

படங்கள்: வி. எம்.மணிநாதன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in