`பணம் வேண்டாம்… வேலை வேண்டும்'- போராட்டத்தில் குதித்த ஃபோர்டு ஊழியர்கள்!

`பணம் வேண்டாம்… வேலை வேண்டும்'- போராட்டத்தில் குதித்த ஃபோர்டு ஊழியர்கள்!

செட்டில்மென்ட் பேச்சு வார்த்தைக்கு வருமாறு சென்னை ஃபோர்டு நிறுவனம், அந்த நிறுவன ஊழியர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டது. கட்டாய வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் ஃபோர்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, 1995-ல் சென்னை அருகே உள்ள மறைமலைநகரில் தொழிற்சாலையைத் தொடங்கியது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலைகளில் சுமார் 14 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை ஃபோர்டு நிறுவனத்தில் வருடத்திற்கு சுமார் 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்றாலும் தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஃபோர்டு நிறுவனத்தில் 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாக இந்த தொழிற்சாலையை நம்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னையிலுள்ள மறைமலைநகர் மற்றும் குஜராத்திலுள்ள சனந்த் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் இரண்டு தொழிற்சாலைகளையும் மூட அந்நிறுவனம் முடிவு செய்தது. ‘தொழிற்சாலையை மூட வேண்டாம். தொடர்ந்து தொழிற்சாலையை இயக்க அனுமதிக்க வேண்டும்’ என்ற ஃபோர்டு நிறுவன தொழிற்சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை அந்நிறுவனம் ஏற்கவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்திலுள்ள பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு நிறுவனத்தின் குறிப்பிட்ட சில பங்குகளை விற்பனை செய்து, ஊழியர்களுக்கு செட்டில்மென்ட் செய்வதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க அந்நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அதுபோல் சென்னையில் உள்ள தொழிற்சாலையிலும் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க அந்நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதில் தங்களுக்குப் பணி வழங்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஊழியர்களிடம் செட்டில்மென்ட் குறித்து பேச அந்நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. ‘எங்களுக்கு செட்டில்மென்ட் வேண்டாம். பணியை உறுதி செய்யுங்கள்’ எனத் தொழிலாளர்கள் நேற்று மாலையிலிருந்து பணியைப் புறக்கணித்துப் போராட்டம் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in